பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

51


பூசனைகள் என்று பொருள்படும். ஆகமச் சிறப்புடையது பூசை என்று சிறப்பிப்பதால் ‘பொருள்’ என்பது ஆகமம் ஆயிற்று.

கண்ணப்பர் செய்தது அன்புப் பூசை. ஆராக் காதலால் நிகழ்த்திய பூசை; ஆகமமுறைப்பூசை மரபுகளைக் கடந்த பூசை.

கண்ணப்பர் வாயில் கொணர்ந்த நீர் திருமஞ்சனம். தலையில் சூடிய மலர் இறைவனுக்குச் சூட்டும் மலர்; சுவை பார்த்த ஊன் திருவமுது ஆயிற்று. செருப்பணிந்த கால்கள் நிர்மால்யம் எடுக்கும் கைகளாயின. இந்தப் பூசை, பெருமானால் விருப்புடன் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.

ஆகம விதிமுறைப்படி பூசை செய்த சிவகோசரியாரின் பூசையினும் கண்ணப்பர் பூசை மிக்குயர்ந்து விளங்குகிறது. கண்ணப்பர் பூசையில் அன்பு முதலிடம் பெற்றிருந்தது; ஊனும் உயிரும் உருகி வழிபட்டார். இதனை,

“அவனுடைய வடி வெல்லாம் நம் பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறி வெல்லாம் நமை அறியும் அறிவென்றும்
அவனுடைய செய லெல்லாம் நமக்கினிய வாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறறி நீ” என்றருள் செய்தார்.

(கண்ணப்பநாயனார். பு. –157)

என்ற பெரியபுராணப் பாடலால் அறியலாம்.

தொன்மைக் கோலம்

மாணிக்கவாசகர் திருக்கழுக்குன்றத் திருத்தலத்திற்குச் சென்று வழிபாடு செய்தார். அப்போது திருக்கழுக்குன்றப் பதிகத்தை அருளிச் செய்தார். திருக்கழுக்குன்றத்தில் இறைவன் திருவடிவில் மாணிக்கவாசகருக்கு காட்சியருளினன்.