பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாணிக்கவாசகர் போரைத் தவிர்க்க எண்ணினார். திருக்கோயில் கட்டினார். திருக்கோயில் கட்டினால் முதலில் மக்களுக்கு வேலை வாய்ப்பு! திருப்பெருந்துறை நன்செய் சூழ்ந்த ஊர். சில மாதங்களுக்கே வேலை இருக்கும். அதனால் மக்களுக்கு வேலை; சிற்பக் கலைக்கு ஆதரவு. மக்கள் வழிபடவும், சமுதாய நோக்கில் கூடி வாழவும் திருக்கோயில் பயன்படும். இசையும் கலையும் திருக்கோயில் வளாகத்தில் வளரும். இன்னிசை வீணையர், யாழினர் மக்கள், மக்கள் மன்றத்திற்குக் களிப்பையும், மகிழ்ச்சியையும் தந்து நல்வாழ்க்கை வாழ்வதற்குத் துணை செய்வர். ஆதலால், திருக்கோயில் தழுவிய சமுதாயம் வளர்ந்தது. களிப்பும்-மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தொழில் முயற்சிக்கு, பொருள் செயலுக்குத் தேவையானது. வினை தொழில் செய்தலில் இருந்து மாணிக்கவாசகர் விடுதலை பெற்றதில்லை.

இந்திய தத்துவ ஞானத்தில் ‘வினை’ என்ற சொல் ஆதிக்கம் செலுத்துகிறது. பொதுவாக வினை என்ற சொல்லுக்குச் செயல் என்று பெயர்; பொருள்.

வினையே ஆடவர்க்கு உயிரே!

என்பது குறுந்தொகை. தொழில் செய்தால்தான் ஆடவன்! இது சங்ககால வழக்கு. திருவள்ளுவரும் “வினைத் தூய்மை” என்றார். வினை- செயல் செய்தல் உயிர் இயற்கை. வினை, கண்ணுக்குப் புலனாகும் பொறிகளால் செய்கிறார்கள். பொறிகளும், புலன்களும் சேர்ந்து செய்கிற செயல்களும் உண்டு. புலன்கள் மட்டுமே செயற்பாடுறுதலும் உண்டு. உயிரின் இயற்கை ஏதாவதொரு தொழிற்பாட்டில்-இயக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். செயலின்றிச் சும்மா இருத்தல் இயலாத ஒன்று.

சும்மா இரு சொல் லறஎன் றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே