பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, நிராகரிக்கிறது! வளர்த்தவனுக்குப் பரிவு, பாசம் விடவில்லை! பேபியின் அருகில் போய் பேபியைக் குப்பை படிந்த உடலுடன் அள்ளித் தூக்குகிறான்! துடைக்கிறான்! முத்தமிடுகிறான்! பேபி செய்வதறியாமல் விழிக்கிறது! குப்பை மேட்டுச் சுகம் பறிபோவதில் கவலைதான்! ஆயினும், வளர்த்தவனின் பிடி இறுக்கமான பிடி! ஓட இயலவில்லை! இந்தக் கதைதான் ஆன்மாவின் கதையும்!

இறைவன் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையைத் தந்திருக்கிறான்! இந்த உலகத்தில் வினைகள் பலவற்றையும் தொழில்கள் பலவற்றையும் செய்து பாருள்ளோர் வாழத் தொண்டு செய்யலாம்! உலகம் உண்ண உண்டு வாழ்ந்தால் தீமையில்லை! நாடெல்லாம் வாழக் கேடொன்றும் இல்லை. ஏன் சண்டை? கலகம்? அழுக்காற்றினால் உயர்ந்தார் உண்டா? கலகம் செய்து காரியம் சாதித்தவர்கள் உண்டா? இல்லை! இல்லை!

இறைவனிடத்தில் பத்திமை செய்க! இறைவன் காந்தம்! நம்மை ஈர்த்து ஈர்த்து ஆட்கொண்டருளத் தக்கவகையில் ஈர்க்கப்படும் ஆற்றலுடைய இரும்பாக வாழ்வோம்! பட்டமரக் கட்டையாக கிடந்து என்ன பயன்? வினைகள் இயற்றுதல், தொழில் செய்தலில் இரும்பு போல உறுதியாக இருப்போம்! துருப்பிடித்து அழியும் இரும்பு போல் ஆன்மாவை ஆணவத்தால் ஆசையால் அழிந்து போகாமல் பாதுகாத்து அன்பு, தொண்டு ஆகியவற்றால் ஆன்மாவை வளர்ப்போம். பாதுகாப்போம். ஆன்மாவை நாளும் தொழில் செய்யும் மனப்போக்கால் உயிர்ப்புள்ள ஆனந்தத்தை ஈர்க்கும் ஆற்றலுடையதாகப் பாதுகாப்போம்.

“வினை, வினை"யென்று பயந்து விடாதீர்கள்! வினை செய்தலே இயற்கை! கடமை! மனக்கோணலின்றிப் பொதுவில் நன்மை செய்யுங்கள்!

வளர்க இவ்வையகம்! வாழ்க இவ்வையகம்!