பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

77


காணவில்லையே என்று மாணிக்கவாசகர் கவலைப்படுகிறார். கடவுளைக் காணாததால் அந்தப் பேரொளி காட்டும் திசையில் செல்லாததால்; கண்டது துன்டமே! சைத்தானுக்குப் பணி செய்தால் துன்பந்தவிர வேறு என்ன பயன்? கடவுள் ஒளி வழி எது செயினும் இன்பமாக அமையும். ஆணவத்தின் திசைவழி நன்றே செயினும் துன்பமேயாம். ஏன்? ஆணவத்தின் வழிகாட்டுதலில் உயிர்கள் நன்று நினைத்தல் இயலாது; நன்று செய்ய இயலாது. ஒரோவழி செய்யப்படுவன நன்மை போலத் தோன்றும். ஆயினும் நன்மையல்ல. உலை நீரில் கிடக்கும் ஆமைக்கு இளஞ்சூடு தரும் இதமான இன்பம் யாது செய்யும்? நன்மை போலக் காட்டித் துன்பம் செய்யும்!

மாணிக்கவாசகர் அனுபவம் வேறு! மற்றவர் அனுபவம் வேறு! இறைவனைக் காண-அனுபவிக்கப் பலர் முயற்சி செய்தனர்; முயன்று கொண்டுள்ளனர். ஆனால், கண்டவர் சிலரே! ஆன்மாவின் அறிவு, சிற்றறிவு! மறதிக்குள்ளாகும் அறிவு, பாசபந்தங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இரையாகும் அறிவு. இந்த அறிவால் தூய்மையே அறிவே வடிவாக உள்ள கடவுளை எப்படிக் காணமுடியும்? நான்முகனும் திருமாலும் தேடிக் காணமுடியாத பொருள், கடவுள் என்ற வரலாறு கற்றுத் தரும் படிப்பினை என்ன? கடவுள் கருணை பாலித்தாலன்றிக் கடவுளைக் காண இயலாது. மாணிக்கவாசகருக்கு, இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி உபதேசித்தருளினான்; காட்சி தந்தான். ‘வருக’ - என்று அழைத்தான். ஆனால், அழைத்துக்கொண்டு போகாமல் இறைவன் மறைந்துவிட்டான்! ஏன்? மாணிக்க வாசகரின் அன்பு பெருகி வளர்தல் வேண்டும். அந்த அன்பைத் துய்க்க வேண்டும் என்ற திருவுள்ளம்தான்! கடவுள் மாணிக்கவாசகருக்கு மறைந்தான். புணர்ச்சி,