பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கையர்க்கரசியார்

91



"மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே!"

என்று, பாராட்டிப் புகழ்ந்து போற்றுகின்றார். திருஞான சம்பந்தர் திருவாலவாய்ப் பதிக்கத்தில் மங்கையர்க்கரசி பாண்டிமாதேவியையும் அமைச்சர் குலச்சிறையாரையும் பாராட்டிப் பாடியுள்ளார்.

"பன்னலம் புணரும் பாண்டி மாதேவி
குலச்சிறை யெனும்இவர் பணியும்
அந்நலம் பெறுநீ ராலவாய் ஈசன்
திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமி ஜிவைகொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவிற் றிருப்பவர் இனிதே'

-திருஞான சம்பந்தர்

பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி வாழ்வால் மலர்ந்தது தமிழகம் இன்று நாம் தமிழராக வாழ்வது மங்கையர்க்கரசி அளித்த கொடையேயாம். இன்று பெண்கள் பெருமையோடு வாழ்வதற்கு மங்கையர்க்கரசியே வித்திட்டாள். மனையறம் விளங்கும் வீடுகள் மங்கையர்க்கரசியின் தவத்தின் பயனேயாம்! இன்று தமிழிசை பாடி மகிழும் வாய்ப்புக்கு அன்று வெற்றி பெற்றுத் தந்தது நமது குலதெய்வம் மங்கையர்க்கரசியே! மங்கையர்க்கரசியின் புகழ் போற்றுவோம்! பேணிக்காத்து மகிழ்வோம்!