பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

137



"மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே”

(பாயிரம்–4)

என்பது சேக்கிழார் பாடல்.

இன்றும் நம்முடைய செழுந்தமிழ் வழக்கில் நின்றொழுகும் அடியார்கள், திருமடத்துத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் ஒருங்கிணைந்து சமய இயல் நடத்தக் காணப்பெற்றதே தெய்வீகப் பேரவை. இன்றைய தமிழகத்தில் சமய நிறுவனங்களை ஒருங்கிணைத்துத் திருத்தொண்டின் நெறியில் ஈடுபடுத்துதல் தவிர்க்க இயலாத கடமை. அதற்குப் பேரவையே சாதனம். சிறப்புற இயங்கிய பேரவையைச் செழுந்தமிழ்வழக்கு வெற்றி பெற்றுவிடும் என்றஞ்சிய அயல்வழக்கினர்; நெருக்கடிக் கால ஆட்சியின்போது முடக்கி விட்டனர்; மூடச்செய்து விட்டனர்; இதனால் மீண்டும் தமிழகத்தில் செழுந்தமிழ் வழக்கிற்கு மாறாக அயல் வழக்கு புகுந்து வளர்கிறது.

இது தமிழகத்திற்கு நலம் செய்யாது. தமிழ்நாடு அரசுக்கும் நலமின்று. இதனை மாண்புமிகு அமைச்சர் அவர்களும் அறிந்தே இருக்கிறார்கள். இந்த விபத்தை இப்போது தடுக்காவிடில் மீண்டும் செழுந்தமிழ் வழக்கு நடுக்குறும். தனித்தன்மை மிக்க தமிழ் மரபுகள் மாசுறும். பாராட்டுதலுக்குரிய முதல்வர் "நான் தமிழ் மதத்தைச் சார்ந்தவன்" என்று கூறிய பெருமித உரை வரலாறாக மாறாமல் போய்விடும். ஆதலால் புனிதர் பேரவையை இயக்க எண்ணம் கொள்க! நம்மனோரைப் பணியில் ஈடுபடுத்துக! பயன்பெறுக என்பது நமது உரிமையோடு கூடிய வேண்டுகோள்.