பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டிய நிலையில் இருக்கிறது. உயிர் உய்வை அடையவுங் கூடும். உயிருக்கு உய்தியைத் தரக்கூடியவன் வரம்பிலாற்றலும், இன்பமும் உடைய கடவுளேயாவான் என்பதும் சைவத்தின் கொள்கை, அங்ஙனம் உயிர் உய்வதற்குரிய வழிகளை-சாதனங்களைச் சைவம், மிகத் தெளிவாகப் பேசுகின்றது. சைவத்தின் சாதனங்கள் அருமையில் எளிமையும், அருள்பயப்பதில் சிறப்பும் கொண்டு, விளங்குகின்றன.

சைவமும் தமிழும்

சைவம் உயிர் தமிழ் உடல். தமிழின் உள்ளீடு சைவமேயாம். சைவத் தமிழென்றே அறிஞர்கள் பேசுவர். சைவத்தை விளக்குகின்ற தமிழ் மறைகளும், சைவம் காட்டுகின்ற இறை இன்பத்தைத் துய்க்க-துணையாகத் தமிழ் மந்திரங்களும் இந்த நாட்டிலே பண்டே இருந்தன என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப"

என்ற தொல்காப்பிய நூற்பாவும், அதற்கு, "தானே என்று. பிரித்துக் காட்டியது தமிழ் மந்திரம் என்பது அறிவித்தற்கு” என்று பேராசிரியர் எழுதிய உரையும், தமிழின் மறைகளும் மந்திரங்களும் இருந்தன என்பதை விளக்குவனவாம்.

"புரையில் பனுவல் நால்வேதம்" எனவும், "நான் மறை முனிவர்" எனவும், "நான்மறை முதல்வர்” எனவும் வரும் புறநானூற்றுப் பகுதிகளும், தமிழ் மறைகளைக் குறிப்பன வேயாம். தேவார திருவாசகங்களிலும் "நான்மறை" "நால்வேதம்’ எனப் பேசப்படுவனவும், தமிழ் மறைகளேயாம். அவைகள், "பண்பொலி நான் மறை' என்றும், "முத்தமிழ் நான் மறை” என்றும் தமிழ் மறைகளைப் பேசுகின்றன. "கொழி தமிழ் மறைப்பாடல்” என்பது மாதவச் சிவஞான முனிவர் வாக்கு.

அத்தமிழ் மறைகள், குமரி கடல் கொள்ளப்பட்ட காலத்து மறைத்தனவாதல் வேண்டும். அங்ஙனம் மறைந்த