பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"பெருங்கடன் மூடிப் பிரளயங்கொண்டு பரமனும்போ
யிருங்கடன் மூடியிறக்கு பிறந்தான்் களேபரமுங்
கருங்கடல் வண்ணன்களே பரமுங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின்றெம் மிறைநல் வீணை வாசிக்குமே”

என்று நாவுக்கரசர் பேசுகின்றார். இக்கருத்தினை, இருக்கு வேதச் சொற்றொடர்கள் விளக்குகின்றன. இது போகப் பல கோடியான கருத்தொப்புமைகள் இருப்பினும் விரிவஞ்சி விடுகின்றனம்.

அருண்மொழிகளுள் சில

திருமுறைகள் சைவப் பக்தியைப் பற்றிப் பேசுகின்றன. அன்பே அன்பே என்று அழுது அரற்றுகின்ற அன்பு நிலையைக் காட்டுகின்றன. சைவ சாத்திரங்களில் பேசப்படுகின்ற நெறிமுறைகளை இலக்கியம் போலிருந்து விளக்குவன. உயிர்களைத் துன்பத் தொடக்குக்குட்படுத்துவன ஐம்புலன்களே. அழிவிலின்ப நுகர்வுக்குத் தடையா யிருப்பனவும் அவையேயாம். அதனாலன்றோ 'வஞ்சப் புலனைந்து', "ஐம்புலக் களிறு” என்றெல்லாம் அறிஞர்கள் இழித்துப் பேசுகின்றனர். இந்த ஐம்புல நுகர்ச்சியினை அடக்கி ஆளுதலைப் "பேராண்மை” என்று பாராட்டுகின்றார் வள்ளுவர். ஞான உணர்வு நிகழ வொட்டாத வண்ணம் தடைசெய்வன இவ்வைம்புலன்கள். ஒரோ வழி உறுதியை நாடுகின்ற நிலை உள்ளத்திற்கு வரும் பொழுது, இப்புலன்களின் ஆற்றல் மிக்கு நின்று, அந்த ஞான உணர்ச்சியினை அடக்குகின்றது என்று அநுபவ உள்ளத்த வர்கள் பேசுகின்றனர். இறைவனே தாயும் தந்தையும். அவனே எல்லா உயிர்களுக்கும் இன்பம் செய்பவன் என்றெல்லாம் கருதி, அன்பு செய்ய எண்ணுகின்றது உள்ளம். ஆனால் உடலில் வாழும் ஐவர் ஒன்றி இருந்து நினைக்கவெட்டாது இன்னல் விளைவிக்கின்றனரே என்று அஞ்சுகின்றேன் என்று ஞானசம்பந்தர் பாடுகின்றார்.