பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லே புராணம் எனத் திரிந்து வந்துள்ளது என்பாரும், பூரணப்பொருளைப்பற்றிப் பேசுவதால் புராணம் எனப்பெயர் பெற்றது என்பாரும் உளர். -

இறைவன், பழைமை க்குப் பழைமையாய், புதுமைக் கெல்லாம் புதுமையாய்ப் பொலிபவன் என்பதை மணிவாசகர் எடுத்துக்காட்டாலும் இனிது உணரலாம்.

“முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப்புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே’’

என்னும் திருஎம்பாவைப் பாடலே இக் கருத்தை இனிது உணர்த்தும்.

எழுபத்திருவர்:

இப்பெரியபுராணத்துள் எழுபத்திருவர் பேசப்படுகின்றனர். சுந்தரரால் அறிவிக்கப்பெறும் தனி நாயன்மார்கள் அறுபதின்மரேயாவர். சுந்தரர் இறுதியாகத் தன்னை அறிவிக்கும்போது தான் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் புதல்வன் என்று அறிவித்து இவர் அறிவித்த அடியவர்களைக்கேட்டு உவப்பவர்கள், ஆரூர்ப்பெருமானின் அன்பர்களாவார்கள் என்று அறிவித்த அளவிலேயே நிறைவு செய்துள்ளார். இருப்பினும் பின்னே வந்த நம்பியாண்டார் நம்பிகள் முதலிய சான்றோர்கள் நமக்கு நாயன்மார்களைக் காட்டிக்கொடுத்த இம் மூவரையும் நாயன்மார்களே என அழைத்து நாயன்மார்களை அறுபத்து மூவராகப் போற்றினர்.

சைவம் ஒரு முழுமைச் சமயம் என்பதற்கேற்ப, முன்னே வந்த பெரியவர்களையும், பின்னே வருகின்ற பெரியவர்களையும் போற்றும் வகையில் செந்நெநி நின்றோரையும், நிற்போர்களையும் ஒன்பது வகைப்படுத்தி இத்திறத்தார் எல்லோரும் நாயன்மார்களே என்று உயரிய கொள்கைவழி நின்று ஒன்பது தொகுப்பினரையும் தொகை அடியார்கள் ஒன்பதின்மர் என்று குறித்துப்போற்றினர். 60+3+9 ஆக 72 பேர் நாயன்மார்களாகப் போற்றப் பெறுகின்றனர்.