பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தியாகேசரே முதலடியார்:

முதலில் 'தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடி எடுத்துக்கொடுத்தது திருவாரூர் தியாகேசப்பெருமானேயாவார். அடுத்து வரும் திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன் என்பது முதலாகத்தான் சுந்தரர் பாடினார். அறுபதின்மர் தனி அடியார்கள், ஒன்பதின்மர் தொகை அடியார்கள் ஆவர். தில்லை வாழ் அந்தணர்கள், பொய்யடிமையில்லாத புலவர், பக்தராய்ப் பணிவார்கள் முதலாக ஒன்பதின்மர். இவர்கள் ஒருவரல்லர். தொகை அடியார்களின் பண்பாடு யார் யாருக்கு உள்ளதோ அவர்கள் எல்லாம் அத்தொகுப்பிலே சேர்ந்தோராவர். இப்பெரியபுராணத்திற்கு முதல் நூல் சுந்தரர் அருளிச்செய்த திருத்தொண்டத்தொகை, வழிநூல் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூல்களையும் துணையாகக் கொண்டே தில்லைக் கூத்தன் திருவருள் “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுத்ததுடன் உள் நின்றும் உணர்த்த எழுந்ததே திருத்தொண்டர் புராணம் என்னும் இப்பெரியபுராணமாகும்.

திருத்தொண்டர்புராணம்:

இவ்வரிய பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் பெருமான் சூட்டியப் பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். இதனைச் சேக்கிழார் வாக்காலேயே அறியலாம். அப் பாடல் காண்க.

    'இங்கிதன் நாமங்கூறின் இவ்வுலகத்து முன்னாள்
    தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
    பொங்கிய இருளை ஏனைப்புறஇருள் போக்குகின்ற
    செங்கதிரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம்'

திருவள்ளுவர் வாக்கே திருத்தொண்டர்புராணத்தைப் பெரியபுராணமாக்கியது.

  'செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
  செயற்கரிய செய்கலா தார்’