பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தனை" என்பார் டெனிசன். மாணிக்கவாசகரும். உயிர் பொய்ம்மை நீங்கி வாய்மையடைந்து மெய்யாய நலமுறுதல் அழுதல்வழி நிகழலாம் என்று கருத்தை,

"யானே பொய் என் நெஞ்சும்
பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
நின்னைப் பெறலாமே,”

என்று அருளிச் செய்துள்ளார். பழந்தமிழகத்தில் தாய் மொழியே-அதாவது தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. அதுதான் இயற்கை இயற்கைக்கு இசைந்து வராதது எதுவும் இறைமைத் தன்மையுடையதாகாது. மூவர், தமிழிலேயே இறைவனைப் போற்றினர்; வழிபட்டனர். சிவபெருமான் அப்பரடிகளுக்காகக் கயிலையை ஐயாற்றில் காட்டியதே, "மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த” என்பதுதான் காரணம் எனச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இங்ங்னம் ஏழாம் நூற்றாண்டில் வெள்ளமெனப் பெருக்கெடுத்த தெய்வத் தமிழ்ப் புனல், சுந்தரர் காலத்தில் வற்றிவிட்டது போலும்! அதனால், பெருமான் தமிழ் கேட்கும் விருப்பத்தால் ஆரூரரை வாய் திறந்து கேட்கிறார். "அருச்சனை போதும்; நாம் கேட்க விரும்புவது பண்பொலி பாடலே” என்று அறிவிக்கிறார்!


"...நமக்கும் அன்பினில் பெருகிய சிறப்பில் மிக்க
அறசனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல்
நம்மைச்
சொற்றமிழ் பாடுக” என்றார்...."


என்பது பெரியபுராணம். நாம் விரும்புவது தமிழருச்சனை மட்டுமன்று. அது முதற்படியே. நாம் உண்மையிற் செய்யவேண்டியது வைணவத் திருக்கோயிலில் செய்வதைப் போலத் திருமுறைச் சாத்துச் செய்து வழிபடுதலேயாகும்.