பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கற்றால் அறியாமை அகலும் ஆணவத்தின் கொட்டம் அடங்கும்; அன்பு ஊற்றெடுக்கும்; பக்தி கணியும்; திருத்தொண்டு செய்யும் உணர்வு முகிழ்க்கும்.

பழங்காலத்தில் அடியார்கள் தனிமை வாழ்க்கையுடையவர்கள் அல்லர். அவர்கள் ஒரு கூட்டம். சாதாரணக் கூட்டமல்ல. திருக்கூட்டம். அடியார் திருக்கூட்டம், நாயன்மார் சொல்லமுதம் ஆர்ந்து அனுபவிக்கும் பேரவை யாகும். பேரவை, சமய உலகிற்கு-சமயவழி நிற்கும் மானிட சமூகத்திற்கு அனுபவத்தின் வழி விதிமுறைகளை வழங்கும். அந்த விதி முறைகளே சமூகத்தின் சட்டங்கள். -

திருத்தொண்டர் வரலாறு கயிலையில் தொடங்குகிறது. கயிலையில் முடிகிறது. ஆம்! எல்லாம் ஈசன் செயல் என்ற அநுபவ வாக்குப்படி - கயிலையே அம்முடிவாய கருத்தைத் தருகிறது. கயிலையே நிறைவேற்றி முடித்து வைக்கிறது. ஆதியே அந்தமாதலும், அந்தம் ஆதியாதலும் மரபு. மலை உயர்ந்தது; உயர்வுக்கு வழி செய்வது; எல்லா மலைகளிலும் சிறந்தது கயிலைமலை, ஓங்கி உயர்ந்த மலை; தண்ணளியிற் சிறந்த மலை; பயன்படு நிலையில் பாரினில் சிறந்தது. பனிமால்வரை, திருநீற்றுக் காப்பின் திருக் கோலத்தை நினைவிற்குத் தருகிறது. அறிவரியான், அநுபவத்திற்குரியான் என்று வாழ்த்தப் பெறும் கடவுள் உறையும் மலை. கயிலை மலை புண்ணியத்தின் திரட்சி, ஆம் அங்குப் பாபத்தின் வாசனைக்கும் இடம் இல்லை. எண்ணங்களில் உயர்ந்த மனிதர்கள் - சிந்தனையில் சிறந்த மனிதர்கள் செயலாலும் சிறந்தே விளங்கிடுவர்; செயல் உயர்ந்தால் பாபம் இல்லை. சிந்தனையில் - செயலில் சிறந்தவர்களே நிறை தவத்தினர். ஆசைகளை, வெறுத்து முனிந்தவர்களை முனிவர் என்று கூறுவது தமிழ் மரபு. வடமொழியில் முநி என்றால் நிறைந்த குணம் உடையவர். அதாவது மநநசீலமாகிய உள்ளத்தொழுக்கம் உடையவர் என்பது பொருள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று