பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“லாட்ஜ்"களுக்குப் போய் விடுகின்றனர். உற்றார், உறவினர் "ஒப்பு”க்குரியவராகி விட்டனர். நிர்ப்பந்தத்தின் அடிப் படையில் பழகுகின்றனர். ஆதலால், அரசும் செயற்கை முறையில் சோஷலிசம் படைக்க முயலுகிறது. அதற்கு மாறாகப் பழந்தமிழக வாழ்க்கை முறை - சேக்கிழார் காட்டிய நெறி வாழ்க்கையாக மலருமானால் இயற்கையாக சோஷலிசம் மலரும்.

மனு, இன்று விவாதத்திற்குரிய பெயர். மனுவைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகள். தர்மநீதி இன்று சர்ச்சைக்குரிய தாகியிருக்கிறது. மனோன்மணியம் தந்த சுந்தரம் பிள்ளை மனு தந்த நீதி முறையைக் கண்டிக்கின்றார்.

"உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்று சாடுகின்றார். ஆனால், உண்மை என்ன? ஆராய்ச்சி என்பது சார்பு நிலையற்றதாக நிகழவேண்டும் என்ற விதியை மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம். மனு என்ற பெயரில் வழிவழி பல மாமேதைகள் வாழ்ந்துள்ளனர். மனு, மக்கள் குலத்திற்கு நீதியை-நெறியைத் தந்தவர். மனு என்ற பெயரில் நீதி தோன்றிய காலம் எது? வழக்கம்போல் வரலாற்றாசிரியர் களிடத்தில் சண்டையே! மனு, ஒருவரா? பலரா? காலத்திற்குக் காலம் மனு என்ற பெயரில் பலர் வாழ்ந்து நீதி சேர்த்தனர் என்பதே பலர் கருத்து. இங்கேயும் வழக்கம்போல் சிலர் முரண்படுகின்றனர். ஒன்றை மறந்துவிடக் கூடாது. மனுநீதி தொடங்கிய காலம் கிறித்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தியது. நாம் வாழ்வது இருபதாம் நூற்றாண்டு! கால வெள்ள்ம் கரைபுரண்டு ஓடி வந்திருக்கிறது. காலவெள்ளம் சமுதாயத்திற்குத் தந்த புதுக் கருத்தைப் பழைய மனிதர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்! அன்று அவன் வாழ்ந்த நிலையில் அவன் கருத்து வளர்ந்த கருத்தே! இன்று விமானத்தைப் படைத்த விஞ்ஞானிக்குப் பழைய கட்டைவண்டியைப் படைத்தோன் முன்னோடி என்பதை மறந்து விடுவது அறிவியலுக்கு அழகல்ல.