பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழாா் செந்நெறி

253


முடையான், நிறத்தால் கறுத்தது; ஆம்! கருணையால் கறுத்தது. அலைகடலில் எழுந்த நஞ்சினால் வானவர் துன்புறாமல், நஞ்சை உண்டதால் ஏற்பட்ட கறுப்பே கண்டத்தில் உள்ள கறுப்பு. அன்னை உமை இறைவன் நஞ்சை உண்டபொழுது கண்டத்தை அமுக்கியதால் நஞ்சு நின்றதென்பது கதை. கதையானாலும் கருத்து உள்ள கதை. ஆம்! ஆற்றல் மிக்குடையார் சமுதாயத் தீமைகளை, நஞ்சனைய கொடுமைகளை மேலும் மேலும் வளராமல் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திக் காக்க வேண்டும் என்ற பாடம் இக்கதையின் கருத்தாகும்.

இத்திருப்பதிகத்தில் திருமுருகன் பற்றிய குறிப்பு கிடைக்கிறது. வள்ளியை முருகன் மணந்த செய்தியை நினைந்து பாடுகின்றார்.

"குறவனார் தம் மகள் தம்மகனார் மணவாட்டி” என்று குறிப்பிடுகின்றார். குறவர் என்றால் இன்று பலர் நாடோடிகளாக வாழும் நரிக் குறவர் என்று கருதுகின்றனர். இது தவறு. குறிஞ்சிநில மக்களுக்குக் குறவர் என்று பெயர் உண்டு. முருகன் குறிஞ்சி நிலக் கடவுள். அன்னை வள்ளியும் குறிஞ்சி நிலப் பெண் என்பதறிக.

இறைவனே பித்தன்

இத்திருப்பதிகத்திலும் இறைவனைப் பித்தர் என்று நினைந்து பாடுகின்றார். பித்துப் பிடித்தல் ஓர் உயர் குணமே. ஆனால் இன்றைய உலகியலில் பித்து கீழ்மைக் குணமாகவே கருதப்பெறுகிறது. இது மரபுக்கிசைந்து வராத பொய்ம்மை. பித்தாவது ஒன்றினைத் தற்சார்பின்றி ஆலோசித்து அன்பும் ஆர்வமும் காட்டி விரும்புதலுக்குப் பித்துக் குணம் என்று கூறுதல் பழைய வழக்கு காதல், பித்தாக எண்ணப்படுதல் உண்டு. ஆனால், அக்காதல், காதலிக்கப் பெறும் பெண்ணுக்குத் துணையாதல், அப்பெண்ணுக்கு இன்ப வாழ்வளித்தல் என்று எண்ணப்படும் பொழுது பித்து என்று