பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொன்மையானது; சிறப்பானது. இறை நினைப்பினைப் பெறவும் நினைப்பினை இழக்காது திரும்பப் பேணவும் பாதுகாக்கவுமே சடங்குகள். இன்றோ நினைப்பொழிந்த சடங்குகளே மிகுந்துள்ளன. இறைவன், நினைப்பில் உறவு கொள்ள வேண்டியவன். நாம் நினைத்தவுடனேயே நாம் நினைக்கின்ற வடிவுடன் நமது உள்ளத்தில் இறைவன் விரைந்து எழுந்தருள்வான். வன்தொண்டர் இந்தப் பதிகத்தில்,

“நுந்தா ஒண்சுடரே நூனையே நினைத்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்று
சிந்தா யெந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தா யுன்னையல்லால் இனியேத்த மாட்டேனே"

என்பது ஒரு பாடல்.

வந்தாய் போயறியாய்

வன்தொண்டர் திருக்கச்சி மேற்றளியில் எழுந்தருளியுள்ள இறைவனை நினைத்தார். இறைவனும் வன்தொண்டர் மனதிற்குள் புகுந்தார். இங்ஙனம் வன்தொண்டர் மனதிற்குள் புகுந்த இறைவன் திரும்ப வெளியே போனதில்லை. ஆம்! பிரிவினை அறியாததுதானே இறைத் தத்துவம். ஒரோவழி தொடர்பு கொண்டு உறவுகளில் இடையறவு ஏற்படுவது விலங்கியல்பு; உறவினைப் பேணல் மானுட இயல்; என்றும் எந்தச் சூழ்நிலையிலும் பிரியாதிருத்தல் இறையியல். நாம் நரகம்புகினும் இறைவன் உடனிருப்பன். இதனை விளக்க "வந்தாய் போயறியாய்" என்றார். இறைவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்பவன் அல்லவா?

வன்தொண்டர் தமது வரலாற்றுக் குறிப்புகளையும் இந்தப் பதிகத்தில் எடுத்துக் கூறியுள்ளார். வன்தொண்டர் இறைவனிடம் கேட்கக் கூடியன எல்லாம் கேட்டுப் பெற்றேன் என்று கூறுகிறார். பொன், மணி, பொருள்கள்,