பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளங்கள் பலவற்றாலும் நிறைந்து விளங்கித் தோன்றுவன. திருக்கேதாரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பதிகத்தில் வாழ்க்கை யுண்மைகள் பலவற்றை நம்பியாரூரர் எடுத்தோதுவது சிறப்பாக உள்ளது.

இந்த வாழ்க்கை நிலையில்லாதது. நிலையில்லாதன வற்றைக் கொண்டு நிலையாயின பெற வேண்டும் என்பது ஆன்றோர் அறிவுரை. பிறவிக் கடலைப் பாழாக்குவானேன்? ஆழ்கடல் கூட முத்து விளைவிக்கிறது; மழைவளம் தருகிறது. பிறவிக் கடல் யாதொரு பயனுமின்றிப் பாழாகப் போனால் நியாயமா? தரிசாகப் போட்ட நிலத்தில் என்ன விளையும்? அதுபோலவே வாழுங்காலத்தினைப் பயன்படுத்தாமல் தரிசாகப் போட்டால் ஏது பயன்? காலத்தை வீணாக்காது அறம் செய்தல் வேண்டும். தமக்கு முன்னர்த் தமிழ் மறை அருளிய இருவர்க்கும் தம்மை அடித்தொண்டன் என்று செந்தமிழ்ச் சுந்தரர் அருளும் எளிமையை எண்ணுக! திருக்காளத்தியிலிருந்து பயணம் செய்யத் தொடங்கித் திருத்தலங்கள் பலவற்றையும் வணங்கிக் கொண்டு இவ்வையகத்தில் சிவலோகம் என்று புகழ் பெற்று விளங்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தை நம்பியாரூரர் அடைந்தார்.

இத்திருத்தலத்தில் சுந்தரருக்கு மங்கல முறையில் வரவேற்பளித்தனர். சுந்தரர், மக்கள் விரும்பும் தொண்டர் மட்டும் அல்லரே! மக்கள் விருப்பத்தில் ஏது நிலைப்பாடு? நற்றமிழ் ஆரூரர், "பிரானார் விரும்பும் திருத்தொண்டர்" என்று சேக்கிழார் அருளிச் செய்துள்ளமை உணர்ந்து அனுபவித்தற்குரிய செய்தி! திருவொற்றியூர்த் திருத்தலத்தில் ஆரா அன்பினில் ஆரூரர், ஊனும் உயிரும் கரைந்துருக வழிபட்டார் என்ற சேக்கிழார் வாக்கின் வழி, திருக்கோயில் வழிபாடு நிகழ்த்தப் பெற வேண்டிய வழிமுறை உணர்த்தப் பெறுகிறது. திருவொற்றியூரில் நம்பியாரூரர் தவசீலராகிறார்! சுந்தரரின் அறிவு, சுந்தரரின் வசத்தில் நில்லாமல்