பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

305


ஆட்சியியல் என்றால் முற்றிலும் உண்மை, நேர்மை, சாத்தியமல்ல. அதுவும் ஜனநாயக அரசியலில் நூற்றுக்கு நூறு உண்மையும் நேர்மையும் காண்பது இயலாது. மக்கள் நலங்கருதி நெகிழ்ந்து கொடுக்க வேண்டிய நிலைகள் ஏற்படும். அப்பொழுது சத்தியம் மாறுபடும். ஆதலால் எடுத்ததற்கெல்லாம் கடவுள் பெயரால் சத்தியம் செய்வது கூடாது; வரவேற்கத்தக்கதுமன்று என்பதை நம்பியாரூரர் செய்கையும் சங்கிலியார் வருத்தமும் உணர்த்துவது ஒர்க,

சங்கிலியார் திருமண்ம் நடந்து விட்டது. நல்ல காதலர்களாக - அருள் நலங்கனிந்த காதலர்களாக நம்பியாரூரரும் சங்கிலியாரும் மகிழ்ந்து வாழ்கின்றனர். காதற்கிழத்தியுடன் இனிது வாழ்தலைப் பிற்காலத்தில் நுழைந்த அயல் வழக்கின் வழி சிற்றின்பம் என்று இகழ்ந்து கூறுதல் மரபாயிற்று! இது தவறு. எங்கு வாழ்கிறார்கள்? எந்நெறியில் வாழ்கிறார்கள்? என்பதல்ல ஆய்வு. எப்படி வாழுகிறார்கள்? என்பதே முக்கியம். காதலிற்சிறந்து தோய்ந்து மகிழ்ந்து வாழ்ந்த நம்பியாரூரரை "பேரின்பம் இனிதமர்வார்" என்று சேக்கிழார் உணர்த்துவது அறிக.

வினைப்போகம் துய்த்தல் தவிர்க்க இயலாதது மட்டுமன்று அறமும் கூட. ஆனால் அந்த வினைப் போகத்தைப் பொறியின்பத்தைச் சார்ந்து திருவருள் சிந்தனை யின்றி அனுபவித்தால் வினை வளரும் ஒருபோதும் வினை நீக்கம் வராது. வாழ்வின்பயணத்தில் இறுக்கமான பற்று குறைந்து மக்கள் பாலும் பக்தியின் பாலும் நெகிழ்ந்த நிலையில் துய்த்தல் அருள் நெறி சார்ந்த அறமாகும் என்பது தமிழ் நெறி என்று உணர்த்துவது நம்பியாரூரர் வரலாற்றின் நோக்கம். எத்தகைய இன்பத்தில் தோய்ந்து வாழ்ந்தாலும் பழைய நினைவுகள் அகலா. பிடிவாதமாகச் சில நாள் மறக்கலாம். ஆனால் முறையான காலங்கள் வந்து புதிய அனுபவங்களின் அழுத்தம் குறைந்து மறந்துபோன பழைய