பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

39


ஆணை தனக்குக் கிடைத்தமை குறித்து அளப்பிலா மகிழ்வெய்துகின்றான். "நல்ல தாய்தந்தை ஏவ நானிது செயப் பெற்றேன்” என்று மூத்த திருநாவுக்கரசு பேசுவதாகச் சேக்கிழார் அருளிச் செய்திருப்பது நினைந்து நினைந்து இன்புறத் தக்கது. நச்சரவம் திண்டிய பிறகும், அப்பரடிகள் அமுது செய்தல் காலந் தாழ்க்கலாகாது என்று கருதி, நஞ்சின் வேகத்தோடு போராடி ஓடிவந்த மூத்த திருநாவுக்கரசின் இனிய பண்புகளை எண்ணும்பொழுது பண்டு பழுத்த முதுமை முழுத்தவத்தையுடைய உயிர் ஒன்று இன்று இவ்விளமையுடலில் உலாவியதோ என்று எண்ணத் தோன்றுகிறது!

பெரியபுராணத்தில் பணிஆள்

வாழ்க்கையை இன்பமாக்கத் தேவைகள் பலப்பல. அவற்றில் இன்றியமையாதது. பணியாள் அமைதல். கருத்திற் கிசைந்த ஆற்றலுடைய பணியாட்கள் அமைதல் அருமை யிலும் அருமை. நல்ல பணியாட்கள் கிடைக்காதவர்கள் இளமையிலேயே கிழட்டுத்தன்மையடைகிறார்கள்! பணி கொள்வோரின் இளமைக்கும் எழுச்சிக்கும் இன்பத்திற்கும் பணியாட்களே பொறுப்பு. காலத்தின் தேவையறிந்து செய்வோர் சிறந்த பணியாட்கள். குறிப்பறிந்து செய்பவர்கள் பரவாயில்லை! சொல்லிச் செய்பவர்களும் ஓரளவு நல்லவர்களே! சொல்லியும் செய்யாதவர்கள் சொர்க்கத்தின் கதவை அடைப்பவர்கள்! சிலர், குறிப்பில் உணர்ந்து தெளி வாக விடைதருவர், பலரிடமிருந்து கேட்டுக் கேட்டுத்தான்் பதில்பெற வேண்டும். அப்படியே பதில் கூறினாலும் தெளிவாகக் கூறமாட்டார்கள். இவர்களெல்லாம் பணியாட் களெனப் பயனின்றி உலவிப் பிணியைத் தருபவர்கள்!

சேக்கிழார், அப்பூதியடிகளுக்கு வாய்த்த பணியாளை அறிமுகப்படுத்துகிறார். அப்பணியாள் அப்பூதியடிகளின் தண்ணிர்ப்பந்தலில் வருகின்றவர்களுக்குத் தண்ணிர்