பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள் 55


கோயில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் இறைவனுக்குப் பூவும் நீருமிட்டு வழிபாடு செய்து கொள்ளுதலைச் சேக்கிழார் எடுத்துக்காட்டுகின்றார். அன்னை காவிரிப்பேராறு, அன்றலர்ந்த மலர்களை அள்ளிக்கொண்டுவந்து, கரையோரத்தின் பாலுள்ள கோயில்களில் ஒதுக்குகிறது. இதனைப் பார்த்த சேக்கிழார், திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு அடியார்கள் பூவும் நீரும் கொண்டு அருச்சிப்பது போலிருக்கிறது, என்று பாடுகிறார். ஆதலால், விரும்பும் அடியார்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை அருச்சிப்பது சேக்கிழாருக்கு உடன்பாடான செய்தி! அதனால்தான் கண்ணப்பர் வரலாற்றில் சேக்கிழார் நின்றுருகிப்பாடுகிறார். கண்ணப்பருடைய அன்பு வழிபாட்டில் சேக்கிழாருக்கு உடன்பாடும் ஈடுபாடும் இருந்தமையால்தான், அந்த வரலாற்றை அவ்வளவு உருக்கமாகப் பாடமுடிந்தது.

அடுத்து, திருக்கோயிலில் திருமுறைத் தமிழால் அருச்சிக்கும் முறையைச் சேக்கிழாரே நமக்கு நினைவூட்டுகிறார். சுந்தரர் வரலாற்றில் தூமறை பாடுவோனாகிய சிவபெருமான் "அருச்சனை பாட்டே யாகும்” என்று அழகுத்தமிழில் ஆரூரரைப் பாடவேண்டியதைச் சேக்கிழார் எடுத்து விளக்குகிறார். நமது குலம் செய்த மாதவத்தால் கிடைத்த தேவாரப் பாடல்களால் இறைவனைப் பாடுவதே அருச்சனை. தேவாரப் பாடல்களை ஒதி மலர்களை இடுதலே வழிபாடு. இதுவே சேக்கிழாரின் தெள்ளிய முடிபு. சேக்கிழார் காட்டிய செந்நெறியை நாம் அனைவரும் கடைப்பிடித் தொழுகவேண்டும். இது நமது கடமை. இதுவே நமக்குரிய நற்றவம்!

பெரியபுராணமும்-திருமுறைகளும்

சேக்கிழார் திருமுறைகளில் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவற்றை முறையாக அவர் ஒதியுமிருக்கிறார். சேக்கிழார், திருமுறைப் பாடல்களைச் சிறப்பாகத் தேவாரத்