பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

59


இங்ஙனம் சிவபெருமான் தூர்த்த வேடம் கொண்டமையைச் சேக்கிழார், உடனுறையும் உமையறியா வண்ணம் தூர்த்த வேடம் கொண்டதாகக் கூறுகிறார். இதில் நகைச்சுவையும் இருக்கிறது; பெண்ணியலார் இயல்பும் வெளிப்படுகிறது.

அடுத்து, சுந்தரருக்கும் பரவையாருக்கும் ஏற்பட்ட பிணக்கைச் சமாதானம் செய்து வைக்கச் சிவபெருமான் தூது போகிறார். சிவபெருமானைத் தூது அனுப்பிவிட்டுச் சுந்தரர், காதல் மீக்கூரக் காத்து நிற்கின்றார். சிவபெருமான் பரவையாரைச் சந்தித்துச் சமாதானம் செய்து விட்டுத் திரும்பி வரும் நடையைச் சேக்கிழார் வாக்கில் படிக்கும் பொழுது, நம்மையறியாமல் சிவபெருமான்மீது இரக்கம் ஏற்படுகிறது! "ஐயோ, பாவம் !" என்று கருத வேண்டியதிருக்கிறது. "அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவெய்த மின்னிடையார்பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் சென்னியில் நீடுங் கங்கை ததும்பத் திருவாரூர் மன்னவனாராம் மறையவனார்பால் வந்துற்றார்” என்று சேக்கிழார் அருமையாகப் பாடுகிறார். ஆயினும், கிண்டிக் கிளறி வேக வைத்த சோறு சுவையுடையதாகி மகிழ்ச்சி தருதல் போல, அடியார்கள் உள்ளத்தில் அன்பினைக் கிண்டிக் கிளறி ஆரத் துய்த்து இறைவன் மகிழ்கின்றான். அந்தத் துய்ப்பே அடியார்களுக்கு அருளின் ஆக்கமாகிறது.

பெரியபுராணத்தைப் போற்றும் முறை

பெரியபுராணம், வாழ்ந்து வாகை சூடிய பிறவியின் பயனையடைந்த சான்றோர்களின் வரலாற்று நூலாகும். பெரியபுராணத்தில் வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழந்தவை. ஏன்? இன்றும் முயன்றால் நிகழக்கூடியவை. ஆனால் நம்முடைய சமய வாழ்க்கை ஊற்றெழுச்சி யுடையதாக இல்லை; உள்ளக் கிளர்ச்சியுடையதாக இல்லை. பொறிகளில் சமயத் தோற்றம் காணப்படுகிறதே தவிரப் புலன்களில் சமய ஒழுக்கம் இல்லை. இந்தக் குறை எங்கிருக்கிறது,