பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 எங்கில்லை என்பதை நாம் பகுத்துக் காட்ட விரும்பவில்லை. இன்றைக்குப் பெரிய புராணம், நம்முடைய வாழ்க்கை வீழ்ச்சியினால் வியப்புறத்தக்க வெறும் அற்புதமாகத் தெரிகிறது. ஏன்? நாம் பெரிய புராணத்தை ஒதுகின்றோம்; எழுத்து, சொல், பொருளுணர்ச்சியோடு தான் ஒதுகின்றோம். பொருளின் பயனுணர்வு நம்மிடத்தில் இல்லையென்று கூறினால் அன்பு கூர்ந்து சினவாது பொறுத்தாற்றுமின் !

ஏழாம் நூற்றாண்டில் திருக்கோயில்களில் திருத் தொண்டுகளாக இருந்தவை-அடியார்களால் தொண்டுள்ளம் கொண்டு செய்யப் பெற்ற தொண்டுகள் அனைத்தும் இன்று தொழில்மயமாகி விட்டன. ஊதியத் தகராறில் முப்போதும் திருமேனி தீண்டுவார் பரம்பரையில் தோன்றியவர்கள் பூசனை செய்ய மறுக்கிறார்கள். எல்லாவற்றையும் பூசனையின் மூலம் பெற்றது போக, இன்று பூசிப்போரே பூவுலகோரைப் பின் நின்று பேரம்பேசி இரக்கின்றனர். நம்முடைய ஆன்மீக வீழ்ச்சி பயங்கரமானது. ஆரவாரம் மிக்க சடங்குகளே நடை பெறுகின்றன. அகனமர்ந்த காதல் மிக்க வழிபாடு அருகிப் போயிற்று. நம் அடியார்களும் இறைவனும் இதுதான் வாழ்க்கை நெறி என்று சுட்டியுணர்த்திய நெறியை, நாம் உளமாரப் பின்பற்றவில்லை. இன்று திருத்தொண்டு ஏது? அல்லது எது? திருத்தொண்டர் யார்? நாடு தழுவிய திருவருட் பேரியக்கம் நடந்த தமிழகத்தில் அந்தத் திருவருட் புனல் வற்றாது முற்றாது வளம் கொழிக்க வேண்டுமென்ற நினைப்பில் அமைந்த திருக்கோயில்கள், திருமடங்கள் தேவைக்கேற்றவாறு இயங்கவில்லை. ஆங்கெல்லாம் உயிர்ப்புள்ள இயக்கங்களைக் காணோம். முன்னோர் வரலாற்றைச் சேக்கிழார் நமக்கு எடுத்துத் தந்தது, படித்து மகிழ்வதற்கு மட்டுமன்று; வாழ்ந்து பயன்கொள்ளவுமாகும். தமிழகத்தின் சமய இயக்கம், நாயன்மார்கள் நிகழ்த்திய தொண்டுகளைத் தொடர்ந்து செய்திருக்குமானால் இன்றிருக்கும் அவலநிலை தினையளவுகூடத் தோன்றியிருக்காது.