பக்கம்:குப்பைமேடு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கணியூர் மதுநெஞ்சனின்
ஒரு மதிப்பீடு

நாவல் என்ற சொல் புதுமை என்ற பொருள் கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியும் எழுச்சியும் பெற்ற நாவல் என்ற இந்த இலக்கிய வடிவம் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளேயே பின்னடைவை நோக்கி நகரத்தொடங்கி விட்டது.

ஆனாலும் புதுமை காணவேண்டிய புதினம் முதுமை எய்திவிடாமல் இருக்க ஆங்காங்கே ஒரு சில எழுத்தாளர்கள் முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்.

வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கதைப் பின்னலிலும் நாவல் ஆக்கத்திலும் ஒரு பக்கம் மெருகேற்றிக் கொண்டே இருக்க-இன்னொரு புறத்தில் தூசுபடிந்து போன கதை மாந்தர்,சுற்றிச் சுற்றிச் செக்கிழுக்கும் காதல் விவகாரம், மடிந்து போய்விட்ட கூட்டுக்குடும்ப வரலாறு இப்படியாகச் சிலர் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு அலையாக மர்மக் கொலைகள், ரத்தக் கறைகள் ...... துப்பாக்கிக் குரல்கள்.

இதற்குப் பக்கபலமாகக் குடும்பக் காவியங்கள், புளு பிலிம்களான கதைகள், சிவப்பு விளக்குகளின் ஒளிப் பாய்ச்சல்கள்...

இத்தகைய நாவல்கள் இளைஞர்களின் மனத்தையும் நிஜத்தையும் கரைத்துக்கொண்டிருக்கின்றன. பொய்யான கனவுகளில் நேரத்தையும் குடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் இரவுகளின் ஒரத்தில் தூரப் புள்ளியாய் வெளிச்சமிடும் விடி வெள்ளியைப்போல் ரா.சி.யின் நாவல்கள் ஒளிவிடுகின்றன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/5&oldid=1112322" இலிருந்து மீள்விக்கப்பட்டது