பக்கம்:குமண வள்ளல்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற் காட்சி

11

காலம் கடத்தினாள் அவள். அவள் இடையில் ஒரு சீலைத் துண்டைக் கட்டியிருந்தாள். மாற்றி உடுக்க வேறு ஆடை இல்லை. ஆகையால் அந்த உடையும் அழுக்குப் படிந்து படிந்து அதனால் சிக்குப் பிடித்து நைந்து குறைந்து வந்தது.

இந்தக் காட்சியும் புலவர் கண்ணில் பட்டது. அவருக்குக் கவி பாடத் தெரியும். வரிசையறிந்து தமிழ் இனிமையை நுகர்பவரிடம் செல்வாரே ஒழியப் பணம் படைத்தவர்களிடமெல்லாம் போக அவர் உள்ளம் இடம் கொடுப்பதில்லை. வயிற்றைவிட அவருக்கு மானமே பெரிதாகத் தோன்றியது. “சோறு இல்லை; துணி இல்லை; தா” என்று பணக்காரர்களிடம் தம் வறுமையை விளம்பரப்படுத்தும் துணிவு அவரிடம் இல்லை. தொழில் ஒன்றும் தெரியாதவர் அவர்.

தம் தாய் படும் துன்பத்தையும் மனையாளும் குழந்தைகளும் படும் அல்லலையும் கண்டு கண்டு அவர் மனம் வருந்தினர். ‘இனிச் சும்மா இருப்பது பாவம்’ என்ற எண்ணம் தோன்றவே, குமணனிடம் சென்று அவனுடைய அன்புக்கு ஆளாகி நலம்.பெற வேண்டும்' என்று உறுதியாகத் தீர்மானித்தார். ஒரு நாள் புறப்பட்டு விட்டார்.

கொங்கு நாட்டுக்குச் சென்று முதிர மலை எங்கே இருக்கிறதென்றும், குமணன் வாழும் ஊர் எது என்றும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். பிறகு அந்த ஊரை அடைந்தார்.

போகும்பொழுதே முதிர மலையையும் பார்த்து விட்டுப் போனர். அது வளம் மிக்க மலையாக இருந்தது. மரங்கள் பல அதில் அடர்ந்து வளர்ந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/17&oldid=1361686" இலிருந்து மீள்விக்கப்பட்டது