பக்கம்:குமண வள்ளல்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானைப் பரிசில்

63

ணீர் இன்றி வறண்டு போகின்றன. அப்படி மழை மாறினாலும் பிற ஆறுகள் வறண்டு போனாலும் மக்கள் யாவரும் ஒருங்கே சென்று உண்ணும்படியாக இருகரையையும் தொட்டுக்கொண்டு நீர் நிரம்பிச் செல்லும் கங்கையைப்போல—”

குமணன் அதுவரையில் புலவர் ஏதோ ஆற்றைச் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தவன், கங்கையை உவமையாக்கி எதையோ சொல்ல வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டான்.

“கங்கையைப் போல வேறு ஆறு ஒன்று இருக்கிறது என்று சொல்லப் போகிறீர்களா? அல்லது—” குமணன் பேச்சை முடிக்கவில்லை; புன்முறுவல் பூத்தான்.

புலவரும் புன்னகை செய்தபடியே கூறலானார், “ஆம்; நான் உயிரற்ற ஆற்றைச் சொல்ல வரவில்லை. ஆற்று நீரைவிட மக்களைக் காப்பாற்றும். நல்லவர் நீர்மை சிறந்தது. வள்ளல்களுடைய தண்ணளி இல்லாவிட்டால் உலகம் உய்யாது. கங்கை கோடையிலும் நிரம்பிச் சென்று பயன் தருவதுபோல, என்னைப் போன்ற புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறு இடங்களில் எந்த விதமான உதவியும் கிடைக்காமல் இருந்தாலும், வேண்டியவற்றை, எங்களுக்கு நிரம்பத் தரும் வள்ளன்மை இங்கே மன்னர் பெருமானிடம் இருக்கிறது.”

“கடைசியில் கங்கையைப்பற்றிய பேச்சு இப்படி வந்துதான் முடிய வேண்டுமா?”

“கங்கையானாலும் எந்த ஆறானாலும் கடலிலே போய்ச் சேர வேண்டும். அப்படியே நாங்கள் எதைப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ் இங்கே வந்து தான் நிற்கும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/69&oldid=1362637" இலிருந்து மீள்விக்கப்பட்டது