பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

27


குழந்தைவேல் செட்டியாருக்கு, மறையூர் முருகன் கோயிலை அமைக்கும் திருப்பணியின் விசேஷத்தைத் தாழையூர் சனாதனிகளும் மறையூர் வைதிகர்களும் கூறினர். அவரும், வெகுகாலத்துக்கு முன்பு கிலமாகிப் போன திருக்கோயிலை மீண்டும் அமைத்துத் தரும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததே என்று பூரித்தார். பணத்துக்குக் குறைவில்லை: ஆகவே, நினைத்த மாத்திரத்தில் ஆள் அம்பு தளவாடங்கள் வந்து சேர்ந்தன. செட்டியார் மறையூர் முகாம் ஏற்படுத்திக்கொண்டு, கோயில் வேலையை ஆரம்பித்துவிட்டார். பல ஊர்களிலிருந்து, கட்டட வேலைக்காரர்கள். சிற்பிகள், ஓவியக்காரர், கூலிகள் ஆகியோர் மறையூர் வந்து குவிந்தனர். மறையூர் சேரிக்குப் பக்கத்திலே, நூறு குடிசைகள் புதிகாக அமைக்கப்பட்டு, அவைகளிலே கூலிவேலை செய்பவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை எழுந்திருப்பார்; காலைக்கடனை முடித்துக்கொண்டு, திருப்பணியைக் கவனிப்பார். அரைத்த சுண்ணாம்பை எடுத்துப் பார்ப்பார்; செதுக்கிய கற்கம்பங்களைத் தடவிப் பார்ப்பார்; வேலையாட்களைச் சுறுசுறுப்பாக்குவார். சோலையிலே புஷ்பங்கள் மலரத் தொடங்கியதும் வண்டுகள் மொய்த்துக்கொள்வது போல, மறையூரில் வேலையாட்கள் குழுமிவிட்டனர். ஒவ்வோர் மாலையும், அங்கிருந்த பெரிய ஆலமரத்தடியிலே அமர்ந்து அன்றாடக் கூலியைத் தருவார்.

பழனிமேல் ஏற்பட்ட கோபம், செட்டியாரின் சொத்தை மதிலாகவும் பிரகாரமாகவும், திருக்குளமாகவும், மண்டபமாகவும் மாற்றிக்கொண்டிருந்தது.