பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

குமரிக் கோட்டம்


உபதேசம் செய்கிறாயே, உன்னுடைய வெளி வேஷத்தை நானும் நம்பினேனே! ஏதோ, வயிற்றுக்கில்லாத கொடுமையால் கூலிவேலை செய்ய வந்தேன். என்ன தைரியம் உனக்கு, வேலைசெய்ய வந்தவளை, வாடி என்று அழைக்க!" என்று கேட்டுவிட்டால்! செ! பிறகு இந்த ஜென்மத்தை வைத்துக்கொண்டும் இருப்பதா? குளம் குட்டை தேட வேண்டியதுதான். ஆண்டவனே! என் சபலம் போக ஒரு வழியும் இல்லையா?" என்று செட்டியார் சிந்திப்பார். சிவனாரைத் துதிப்பார்; நாளாகவாக, காதல் தன்னைப் பித்தனாக்கிக் கொண்டு வருவதைத் தெரிந்து பயந்தார்.

ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள்.

"என்னாங்க உடம்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க." "ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே !" "ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க" "எனக்கென்ன களைப்பு! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?" "உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன,கூலி வேலை செய்ய? நீங்க மகாராஜா." "உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம் பிராயத்திலே சேற்றிலேயும் மண்ணிலேயும் இருக்க. குமரி! உனக்கு ஒரு பணக்காரனாப் பார்த்துக் கலியாணம் செய்துவிட்டா, கூலிவேலை ஏன் செய்யப் போறே பிறகு."