பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

குமரிக் கோட்டம்


திருந்ததுபோலத் தம் அருகே உட்கார்ந்திருந்ததேயில்லை; அவள் கை, செட்டியாரின் மார்பிலே பட்டபோது புளகாங்கிதமானார். கண்களை மூடிக்கொண்டார். அவளுடைய "மூச்சு" அவருக்குத் தென்றல் வீசுவது போலிருந்தது. என்னென்னமோ எண்ணினார். உடலே பதறிற்று அவருக்கு. மார்புவலிமட்டுமில்லை. செட்டியாருக்குக் குளிர் ஜூரம் என்று குமரி எண்ணிக்கொண்டாள். அவருடைய உடல் பதறுவதைப் பார்த்து. ஜுரம், ஆம் — ஆனால், அந்த நோயைக் கிளறியது அவளுடைய அழகு என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை. ஆபத்து வேளை: ஆனால் தப்பித்துக்கொண்டார் செட்டியார், மீனா அங்கு வந்ததால். "மார்வலி, தைலம் தடவினேன், ஜுரம் வரும்போலிருக்கு" என்றாள் குமரி. "பார்த்தாலே தெரியுதே" பச்சைச் சிரிப்புடன் கூறிக்கொண்டே போய்விட்டாள் மீனா.

தைலம் பூசிக் கொண்ட பிறகு, செட்டியாரின் தாபம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இனி இங்கிருந்தால். எந்தநேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ, வெறி மீறி என்ன விபரீதான செயல் புரிந்துவிடும்படி நேரிட்டுவிடுமோ என்ற திகில் அதிகரித்தது. இனி இங்கிருக்கக் கூடாது இரண்டோர் நாட்கள், வெளியூர் போய்வருவது நல்லது என்று எண்ணி, மறையூரை விட்டுக் கிளம்பினார். மனச்சாந்திக்காக இம்முறையைக் கையாண்டார். ஆனால் எந்த ஊர் சென்றாலும், அவள் பின் தொடர்ந்தாள். அதோ செட்டியார், அந்தியூர்க் கடை வீதியில் அருணாசலச் செட்டியார் கடையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். புதிதாக வந்த பம்பாய்