பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

குமரிக் கோட்டம்


திடீர் திடீரென்று கிளம்புகிறது; லாகிரியால் ஏற்பட்ட ஆனந்த நிலைமையிலே அவள் இருந்தாள். அவள் நிலை இழந்தாள், அவர் இன்பம் பெற்றார். தாம், சூது செய்து அந்தச் சுந்தரியை அடைந்ததாகவே அவர் எண்ணவில்லை; எப்படியோ ஒன்று எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது என்ற திருப்தி. அதுமட்டுமில்லை, சாமர்த்தியமாக அந்தச் சரசியைப் பெற்றுவிட்டோம் என்ற சந்தோஷம். மதில் சுவரின் மீது ஓசைப்படாமல் ஏறி, மேல் வேட்டியை வீசிக் கிளையை இழுத்து, கிளையிலே கூத்தாடிய மாங்கனியை மெல்லப் பறித்தெடுத்து, முகர்ந்து பார்த்துத் தின்னும்போது, அதன் சுவையிலே இலயித்துவிடும் கள்ளனுக்கு, கனி திருடினோம் என்ற கவனங்கூட வருவதில்லை. மீறிவந்தாலும், தன் சாமர்த்தியத்தைத் தானே புகழ்ந்து கொள்வானே தவிர, செச்சே! எவ்வளவு சூதாக நடந்துகொண்டோம் என்று எண்ணிச் சோகிக்கமாட்டானல்லவா! கனியைக் களவாடுபவனை விட, கன்னியரைக் களவாடுபவன், கட்டுத் திட்டம், சட்டம் சாத்திரம், பதிகம் பாசுரம் ஆகியவைகளின் பிடியிலா சிக்குவான்! முள்வேலியைத் தாண்டிவிட்டோம் என்று கருதிக் களிப்பான். இன்ப இரவு. அவ்வளவு தான் அவருக்குத் தெரியும்! அவள் ஓர் அழகி, அவ்வளவுதான் அவருக்குத் தெரியும். அவளை அடைந்தாகிவிட்டது. அதுபோதும் அவருக்கு. குறும்புப் பார்வைக்கும் கேலிப் பேச்சுக்கும் கூடக்கோபித்துக் கொள்ளும் குமரி, குழந்தைபோலத் தூங்கிவிட்டாள். குழந்தை வேலச் செட்டியாரின் மடியில் சாய்ந்தபடி. செட்டியார், மடியில் சாய்ந்திருந்த மங்கையைப் பார்த்தபடி இருந்தார். நெடுநேரம் தூங்கவில்லை. பிறகு, அப்படியே அவரும்