பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உள்ளும் புறமும்

47

படம் ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டான். சில போட்டோக்களை மாட்டலாம் என்று யாரோ நண்பர்கள் சொன்னபோது அவன் அந்த யோசனையை ஏற்கவில்லை.

அவன் மனசுக்குள் ஏதோ ஒன்று அங்கே போட்டோக்களை மாட்ட வேண்டாமென்று சொல்லியது. வாசனை, வாசனை என்று சொல்கிறார்களே அதுதானோ இது? எவ்வளவோ காலமாகக் கடவுளை வழிபடும் குடும்பம் அது. திடீரென்று அதைக் கைவிடுவது என்றால் பழக்க வாசனை விடுமா? ஆனால் படங்களை எடுக்காவிட்டால் நண்பர்கள் எளிதில் விட்டுவிடுவார்களா? மானத்தை வாங்க மாட்டார்களா?

மனசுக்குள் உறுத்தல் இருந்தாலும் கூடத்தில் இருந்த படங்களையெல்லாம் எடுத்துவிட்டான். அவனுடைய வயசான அத்தை ஒருத்தி அவனை இதற்காக வைதாள். அதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

படங்களையெல்லாம் எடுத்த பிறகே கட்சித் தலைவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து உபசரித்தான். ஒருநாள் க. ம. கட்சித் தலைவர் தோழர் நடராஜன் அவனுடைய வீட்டுக்கு வந்திருந்தார். அவர் முருகேசனுடைய கட்சிப்பற்றைப் பாராட்டினர். “உங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வந்த மூடப் பழக்கங்களை இவ்வளவு விரைவில் விட்டொழித்ததற்கு ஈடும் எடுப்பும் இல்லை. உங்களைப்போல ஐம்பதுபேர் இருந்தால் தமிழ்நாடு முழுவதையும் ஒரு கலக்குக் கலக்கிவிடலாம்” என்று சிலாகித்தார்.

“தம்பி, அவர் யார்? எங்கே வந்தார்?” என்று அத்தை கேட்டாள்.

“அவரா? தமிழ் நாட்டில் இன்று அரசியல் தலைவர்களாக உலவும் பொம்மைகளைப் போலன்றி உண்மை