பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

குமரியின் மூக்குத்தி

அரசருக்குரிய செலவு, அரசாங்கச் செலவு என்று வேறு பிரித்துப் பார்க்கும் கெட்ட வழக்கம் காட்டுக் கோட்டை அரசில் இல்லை. ஆதலின், அரசாங்கச் செலவு மிகுதியாகிவிட்டதென்பதைக் குடிமக்களுக்கு அறிவித்து, மேற்கொண்டு அரசாங்கத்தின் வரவை அதிகப்படுத்தும் வழி துறைகளை ஆராயும் அவசியத்தையும் தெளிவாக வற்புறுத்த மந்திரிமார்கள் முன்வந்தனர்.

மந்திரிகளும் சேனாதிபதியும் அரசரும் அந்தரங்க ஆலோசனை செய்தார்கள். "என் சம்பளத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்கிறேன்” என்று முதல் மந்திரி விண்ணப்பித்துக் கொண்டார்.

"சே சே! அது கூடாது. உங்களுக்கு இப்போது கொடுக்கும் சம்பளம் போதாது. மற்ற ராஜ்யங்களில் வெறும் மந்திரிக்கே ஆயிரக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். நாமெல்லாம் மிகவும் அவசியமான தேவைகளுக்குக் குறைவாகவே பொருளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை நம்முடைய விசுவாசமுள்ள குடி மக்கள் நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் செய்வதில்லையே! எல்லாம் சட்ட சபையின் மூலமாகவேதான் நடைபெறுகின்றன. இனிச் சம்பளக் குறைவைப்பற்றியே பேசக்கூடாது” என்று அரசர் ஒரு பிரசங்கமே செய்துவிட்டார். .

நாங்களும் அப்படிச் செய்யலாமென்று எண்ணியிருந்தோம். ஆனால் மன்னர்பிரானின் திருவுள்ளம்...” என்று இழுத்தார் ஒரு மந்திரி.

"அதைப்பற்றி இனிப் பேசுவதில் பயன் இல்லை. அரசர் பெருமானுக்கு உவப்பில்லாத ஒன்றை நாம் செய்யக்கூடாது" என்று முதல் மந்திரி கூறினார். .

"சரி, சரி; நாம் மேலே பொருள் வருவாய்க்கு வழி என்ன என்று ஆலோசனை செய்யலாம்” என்று அரசர் நினைவுறுத்தினார்.