பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

39

வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்
வாலி லடிபட்டு மனமகிழ்வேன் ‘மா’ வென்றே
ஓடிடும்நும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து நீர்
மிக்க வுணவுண்டு வாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்!

காளை மாட்டோடு சேர்ந்து கானக்குயில் வாழ்க்கை

நடத்தவுள்ள முறை மிகச் சுவையாக உள்ளதல்லவா?

மாட்டையும் குரங்கையும் புகழ்வதற்காக மானிடரைக் கிண்டல் செய்யும் குயிலின் மாயப் பேச்சுகளைக் கேட்ட பிறகு, சஞ்சீவி மலைக்குப் போனால், அங்கே மூலிகையின் மூலம் உலகின் பல பகுதியினரும் பேசுவதைக் குப்பனும் வஞ்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து தேசத்தில் இருந்து ஒருவன் பேசுவது காதில் விழுகிறது. இருவரும் கவனிக்கிறார்கள்.

வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான். காந்தியடிகள் தலைமையில் அவன் ஆட்சியை அகற்ற அறப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். பகவத்சிங், வாஞ்சி நாதன் போன்ற வீரர்கள் வெள்ளையரைச் சுட்டுக் கொன்றுதான் சுதந்திரம் பெறவேண்டும் என்று இரகசிய ஆயுதப் புரட்சிகளில் ஈடுபடுகிறார்கள். நேதாஜி அன்னிய ஜப்பானியர், செருமானியர் உதவியுடன் பாரதத்தை மீட்கப் படைதிரட்டி வருகிறார். இப்படி யாளுக்கொரு முறையில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து தேசத்துக்காரன் ஒருவன்-நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் வெள்ளைக்காரன் ஒருவன்-பேசுவது காதில் விழுகிறது. குப்பனும் வஞ்சியும் கவனமாய்க் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் இங்கிலாந்து நாட்டில் வெள்ளைக்காரர்கள் மத்தியில் சொற்பொழி வாற்றுகிறான்.