பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டுக் கல்வியின் தேவை

17

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற லார்டு மெக்காலே என்பவர் ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்.

அரசாங்கத்தில் வேலைக்குச் சேரும் எல்லா இந்தியர்களும் ஆங்கில மொழி பயின்று கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். இதனால் இலண்டனிலிருந்து வரும் அதிகாரிகள் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களாய் இருந்தால் போதும்.

அவர்களை எந்தப் பகுதிக்கும் நினைத்தவுடனே மாற்றலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியர்கள் ஆங்கிலம் கற்பதற்காகப் பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

அரசாங்க வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பல இந்தியர்கள் இந்தப் பள்ளிக்கூடங்களில் பயின்றார்கள்.

பயின்று தேர்ந்தவர்களுக்கு, அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி பல வேலைகள் கிடைத்தன.

ஆங்கிலப் படிப்பினால் பல நன்மைகள் ஏற்பட்டன.

லார்டு மெக்காலே கணக்கர்களை உருவாக்குவதற்காகத் தொடங்கிய இந்தப் பள்ளிகள் ஆங்கிலத்தையும் கணக்கையும் மட்டுமே சொல்லிக் கொடுக்க வில்லை. வரலாறு, புவியியல், விஞ்ஞானம், வானியல், ஆட்சியியல் போன்ற புதுமைக் கல்விகளையும் கற்றுத் தந்தன.