பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

53

வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது” என்றார் ஒருவர்.

“நன்கொடை கொடுக்கும் போது சமபந்தி நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டதா அல்லது வாக்களிக்கப்பட்டதா? பள்ளிக்கூடத்துக்குப் பாடம் நடத்த நன்கொடை கொடுத்தீர்களா? சமபந்திக்கென்று கொடுத்தீர்களா?” என்று ஒரு ஐயர் கோபமாகக் கேட்டார்.

“இனிமேல் சமபந்தி நடத்துவதாக வாக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நன்கொடை களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று ஒரு தமிழர் ஆவேசமாகக் கூறினார்.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசப் பேச சூடு ஏறிக் கொண்டே யிருந்தது.

தலைவர் டாக்டர் நாயுடு எல்லாரையும் அமைதிப் படுத்தினார்.

“இப்பொழுது நான் தீர்மானத்தை வாக்களிப்புக்கு விடுகிறேன்.” உங்கள் வாக்களிப்பின் படி ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறித் தீர்மானத்தை வாசித்தார்.

“குருகுல வளர்ச்சிக்காக தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொடுக்க நேர்ந்ததற்கு இச் செயற்குழு வருந்துகிறது”

தீர்மானத்தை டாக்டர் நாயுடு படித்தார்.