பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம் புரண்டார்

75


பருவம் முதிர முதிர இலட்சியங்களில் ஈடுபாடு குறைந்து சூழ்நிலையை அனுசரித்து நடக்கத் தொடங்குகிறவர்கள் மதிக்கப்படுவதில்லை. அதனால் மறக்கப்படுகிறார்கள். இதற்கு காந்தியடிகள் நல்ல சான்றாகிறார்.

காங்கிரசில் செல்வாக்குடைய பார்ப்பனத் தலைவர்கள் காந்தியடிகளைத் தங்கள் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம்.

குருகுலம் பற்றி ஒரு குழப்பமான கருத்தை வெளியிட்டு அவர்களை ஆதரித்த காந்தியடிகள், பிற்காலத்திலும், தாம் வளர்த்த சம நீதிக் கொள்கைக்கு மாறுபட்டுப் பேசத் தொடங்கினார்.

1925ஆம் ஆண்டு இறுதியில் காங்கிரசிலிருந்து விலகிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து நாடெங்கும் சுற்றிச் சுற்றி மிகத் தீவிரமாகக் கொள்கை பரப்புதலில் ஈடுபட்டார்.

குடியரசு இதழ் மூலமும் சாதி ஒழிப்பு விளக்கங்களை மக்களிடையே பேரளவில் பரப்பினார்.

இதைத் தாங்க முடியாத பார்ப்பனத் தலைவர்கள் காந்தியடிகளைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து வருணாசிரம தருமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச வைத்தனர்.