பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தியடிகள் தடம் புரண்டார்

79

வருணாசிரம முறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று புரட்சி செய்தார்,

காந்தியடிகளின் இது போன்ற சொற்பொழிவுகளைக் கேட்டபிறகு, பெரியார், தோழர் எஸ். இராமநாதனை உடனழைத்துக் கொண்டு காந்தியடிகளைப் போய்ச் சந்தித்தார். காந்தியடிகளுடன் பேசியது பற்றி 28-8-1927 குடியரசு இதழில் கீழ்க் கண்டவாறு எழுதியிருக்கிறார்.

முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியே தான் மகாத்மாவிடம், நாமும், நமது நண்பரான திரு எஸ். இராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம், இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்க வேண்டுமென்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை யென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது, ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது. இரண்டாவது ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது. மூன்றாவது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.

இம் மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிரா-