பக்கம்:குறட்செல்வம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அன்பின் விளைநிலமாகவும் ஆக்கலாம். அருள் ஒழுக்கத்தின் செயற்பாடாகவும் ஆக்கலாம். அங்ஙணமின்றிக் குப்பைத் தொட்டியைவிடக் கேடானதாகவும் ஆக்கலாம். அது, இயக்குவோரின் ஆற்றலையும் தகுதிப்பாட்டையும் பொறுத்தது. இதை உணர்ந்தே,

நல்லதோர் வீணைசெய்தே—அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
..................................
வல்லமைதாராயோ? —இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

என்று கேட்கிறார் பாரதியார்.

காடுகளைக் கழனிகளாக்கிப் பயன் காண்பது மனித ஆற்றல். கல்லை பேசும் பொற்சிற்பமாக்கிக் கவின் செய்வது மனித ஆற்றல். இவைபோன்றே, குறைமலிந்த மனித வாழ்க்கையை நிறைவுடையதாக்கித் தெய்வத்தின் நலம் பொதுளச் செய்வதும் மனித ஆற்றலேயாகும். ஏன்? மனிதனே தெய்வமாகலாம், வாழ்வாங்கு வாழ்ந்தால்! ஆம்! தெய்வமாக மதிக்கப் பெறுவான்.

இத்தகு பேராற்றல் அவனுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கிறது. "தெய்வம் நீ என்றுணர்" என்று நமக்கு உணர்வூட்டுகிறார் பாரதியார். 'கை வருந்தி உழைப்பவர் தெய்வம்' என்கிறார்.

இந்தப் பேருண்மைகளை உள்ளடக்கியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

என்றார் திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/12&oldid=1551375" இலிருந்து மீள்விக்கப்பட்டது