பக்கம்:குறட்செல்வம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மதிப்புரை

வள்ளுவன் குறளை வையகம் முழுதும் அறியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள விளக்கமும் அதிகம். வாழ்க்கையின் அடிமுதல் நுனிவரை அளந்து காட்டக் கூடிய ஒரே நூல் திருக்குறள். மனித வாழ்க்கை மூன்று துறைகளில் போகிறது என்பதைத்தான், 'அறம் பொருள் இன்பம்' என்ற பகுப்பு நமக்குக் காட்டுகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு திருக்குறள் எதிரொலிக்கிறது.

தோண்டத் தோண்டச் சுரக்கும் ஊற்றுப்போல், படிக்கப் படிக்கப் புதிய பொருள்களைக் காட்டுகிறது திருக்குறள். வேறு எந்த மொழியிலும், இவ்வளவு தெளிவான ஒரு நீதி நூல் இருக்குமா என்பது சந்தேகமே.

பேராசிரியர்களின் வழியில் வள்ளுவரின் கண்ணோட்டத்தை ஆராய்கிறார் தவத் திரு குன்றக்குடி அடிகளார். நடையின் எளிமை, படிப்பதைச் சுலபமாக்குகிறது. அடிகளாரின் திறனாய்வு நடை, பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் அமைந்திருக்கிறது.

ஒரு குறளுக்கு ஒரு தலைப்பு என விளக்கம் தருவது புதிய முறை. பெரும்பாலும், ஒர் அதிகாரத்துக்கு ஒரு தலைப்பு என்ற முறையில்தான், மற்றவர்கள் எழுதி உள்ளனர். எல்லா குறள்களுமே பொருள் உள்ளவை தான் என்றாலும், சாாசரி மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒட்டிவரும் குறள்கள், தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டியவை.

ஆயிரத்து முந்துாற்று முப்பது அரும் குறள்களில் நாம் தேடி, சாறு திரட்டிக் கொண்டிருக்கும் வேலையை, கலபமாக்க —தாமே திரட்டித் தந்திருக்கிறார் அடிகளார்.

வாழ நினைப்பவர்களுக்கு வழி காட்டும் நூல் இது. பொருட் செறிவுள்ள நூல்களை வெளியிடும், 'கலைவாணி புத்தகாலயம்' உரிமையாளர் நண்பர் சீனி. திருநாவுக்கரசு அடக்கம் மிக்கவர். ஆழ்ந்த கருத்துகளில் பற்றுள்ளவர். ஒவ்வொரு வீட்டிலும் புத்தக நிலையத்திலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் இது.

அன்பன்,


கண்ணதாசன்.

சென்னை-17
11–4–74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/5&oldid=1551381" இலிருந்து மீள்விக்கப்பட்டது