பக்கம்:குறளோவியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலைக்குத் தூது! மாலை நேரத்திலே-சோலை ஓரத்திலே-வேலை நிகர்த்த விழியினர் காதல் பயில்வர். அதுபோது ஆலையிட் கரும்பென அவதிபட்டு உழல்வர் ஆளன் அருகிலா மாதர். அந்திவானத்தின் அழகு காண்பர்-அதனோடு தன் இதழை ஒப்பிடும் அழகன் அங்கு வரவில்லையே என அயர்வர். தென்றல் அவர்தம் ஆடை நகர்த்தும். அதற்கு வாழ்த்துக் கூறித்தம்மைக் கேலி செய்யும் இன்பலோக ஏந்தல் இன்னும் வரக்காணோமே என விம்முவர். பூங்கொம்பு மலரிதழைத் திறப்பதற்கு முன்பே தேன் வண்டு பறந்து வரும் தன்மை காண்பர். "வண்டு தழுவும் மலர்பார் கற்கண்டே !" என இன்பம் மொண்டு தரும் எந்தன் துரையை இன்னும் காணோமே என எங்கு வர். மனம் வீங்குவர். மாலைப்பொழுது, அவர் தம் நெஞ்சில் படைகொண்டு தாக்குவது போல் தோன்றும் - இன்பம் தரவல்ல காதலையே நோயென்று கூறுவர். அந்த மனோ நிலையைத்தான் வள்ளுவர் அழகாகக் கூறுகிறார். காலைப்பொழுதிலே அரும்பாய்த் தோன்றி, பகலெல் லாம் பேரரும்பாகத் தழைத்து, மாலையில் மலராக மாறு கிறது இந்தக் காமநோய். அதற்கு இதோ குறள்: காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்" அந்நோய் மலருகிற மாலை நேரம் எப்படி இருக்கி றது தெரியுமா மங்கைக்கு? அவளைக் கொல்ல வருகிற சேனையானது நெருப்புப்போல உள்ள மாலை நேரத்திற்கு தூதாக வருகிறதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/5&oldid=1688597" இலிருந்து மீள்விக்கப்பட்டது