பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரா. நெடுஞ்செழியன்,

செயிண்ட்ஜார்ஜ்
கோட்டை,

கல்வி-தொழில் அமைச்சர்.

சென்னை-9
ஏப்ரல் 23,1967.

உலகப் பேரறிஞர்களின் மதிப்பையும், பாராட்டுதலையும் பெற்ற திருக்குறளின் கருத்துக்களை இசைப்பாட்டின் மூலம் பரப்பும் நல்ல நோக்கத்தை மேற்கொண்ட சலகண்டபுரம் நண்பர். திரு.ப கண்ணன் அவர்கள் “குறள்நெறி இசையமுது” என்ற பெயரில் ஒருநூலை யாத்திருப்பது பாராட்டி வரவேற்கத் தக்கதாகும்.

இசையும் தாளமும் பொருந்த, எடுப்பு, தொடுப்பு, படுப்பு, முடிப்பு, சந்தம் என்ற முறையில் பாட்டினை வகுத்து, அழகிய, இனிய, எளிய தமிழில் திருக்குறள் கருத்துக்களை விளக்கிக் காட்ட முற்பட்டிருப்பது ஆசிரியரின் அரும்பெரும் திறமையைக் காட்டுவதாகும். இசையரங்கம் ஏறும் இசைவாணர் அனைவரும் இந்த இசைப் பாட்டுகளைப் பயன்படுத்துவார்களே யானால், குறள்நெறிக் கருத்துக்கள் எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டு, பதிந்து நிற்க வாய்ப்பு ஏற்படும். தமிழகத்து இசைவாணர்கள் இந்த நூலைப் பெரிதும் வரவேற்றுப் பயன்படுத்திக் கொள்வார்களாக!