பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 O அ. ச. ஞானசம்பந்தன்


அடிப்படையாகக்கொண்டு முத்தநாதனை உள்ளே விட மறுத்தால், அரசர் கோபிப்பார் என்பதை அறிவான் தத்தன். உண்மை ஊழியனாகிய அவன் மிகவும் சாமர்த்தியமாக, 'இப்பொழுது சந்தர்ப்பம் சரியாய் இல்லை, அரசர் உறங்குகின்றார்,’ என்று கூறினான். இத்தகைய அறிவாளியாகிய ஒருவனைத் தான் மெய்க் காவலனாகக் கொள்ளவேண்டும் என்பதையும் வள்ளுவர், ‘குறிப்பில் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல்,' என்று அழகாகக் குறிப்பிடுகிறார்.

தத்தன் தடுத்ததைக் கவலைப்படாமல் உள் நுழைந்த முத்தநாதன், அரசர் கட்டிலில் படுத்து உறங்குவதையும், அவருடைய மனைவியார் அருகே அமர்ந்திருப்பதையுங் கண்டான். அரசர் எழுந்தார்; வரவேற்றார் இந்தப் போலி அடியாரை. அவருக்கு உபதேசஞ் செய்யப் போவதாகக் கூறினான் முத்தநாதன். அவனை உயர்ந்த பீடத்தில் அமரச் செய்து, தாம் கீழே நின்று தலை தாழ்த்தி, வணங்கி உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார் மெய்ப் பொருள். முத்தநாதன், சுவடிக்குள் இருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்திவிட்டான்.

இத்தகைய ஒரு சூழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு அச்சத்துடன் வாயிலில் நின்றவனாகிய தத்தன், கண் இமைக்கு முன் வாளை உருவிக்கொண்டு முத்தநாதனைக் கொன்றுவிட உள்ளே ஓடி வந்துவிட்டான். குத்துப் பட்ட காயத்துடன் கீழே விழப்போகின்ற மெய்ப்பொருள், தத்தன் வருவதையும் அவன் மனக் கருத்தையும் கண்டு விட்டார்; இரத்த நஷ்டத்தினால் பேச முடியவில்லை. யாயினும், தம் பலத்தையெல்லாம் ஒருங்கு திரட்டி இரண்டே வார்த்தைகள் பேசினார். என்ன வார்த்தைகள்? “தத்தா, நமர்!" என்று கூறினாராம். ‘தத்தா, அவரை ஒன்றுஞ் செய்யாதே! அவர் நம்முடைய உறவினர்!” என்பதே இச் சொற்களின் பொருள்.