பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 5


இச் சொற்களைக் கூறியதோடு அமைந்து விடவில்லை அவர். தன்னை மறந்த நிலையில் வேகமாக வரும் தத்தன், எங்கே தம்முடைய சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பழி வாங்கி விடுவானோ என்று அஞ்சிய மெய்ப்பொருள், நீண்ட தம்முடைய கையையும் நீட்டி, "அவரை ஒன்றுஞ் செய்யாதே!" என்று தடுத்தாராம்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சியை முழுவதும் மனத்தில் வாங்கிக்கொண்டு பார்த்தால்தான், ஒரு குறளுக்கு உண்மையான பொருளை அறிய முடிகின்றது.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு ?”

'தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யாவிடின், சால்பு என்ற ஒன்றைப் பெற்றதன் பயன் யாது?'

மெய்ப்பொருள், குறளின் மெய்ப்பொருள் கண்டு வாழ்ந்தார். தமிழ் மக்கள் இதயத்தில் அழியா இடம் பெற்றார்.