பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. உலகத்தார் உள்ளத்தில் !

பழங்கால அரசர்களுடைய கதைகளைப் படிக்கும் பொழுது சில வேடிக்கையான சந்தேகங்கள் தோன்றுவது உண்டு. ஒவ்வோர் அரசனைப் பற்றிச் சொல்லும் பொழுதும், அவன் மூவுலகத்தையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவன் என்று சொல்லப்படும். சக்கரவர்த்தி என்ற பெயரை அவன் தரித்துக் கொண்டிருப்பான். என்றாலும், அவனுடைய ராஜ்யத்தின் நூறாவது மைலில் மற்றொரு சக்கரவர்த்தி ஆட்சி செய்வதும் உண்டு. அவனும் திரிலோக சக்கரவர்த்தியாகவே சொல்லப்படுவான். நூறு சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஒரு பகுதியில் இரண்டு சக்கரவர்த்திகள்- இரண்டு பேரும் திரிலோக சக்கரவர்த்தி என்ற பெயருடன் இருப்பது சற்று விந்தைதான்.

மிகப் பெரிய காவியங்கள் எழுதினவர்கள் கூட இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ‘எய் என எழு பகை எங்கும் இல்லாமல்’ மூவுலகத்தையும் ஒரு குடைக் கீழ் ஆண்டதாகத் தசரசன் பேசப்படுகிறான். ஆனால், தசரதனுடைய தலைநகருக்கு ஒரு சில காத தூரத்துக்குள்ளாகவே மிதிலையைத் தலைநகராகக் கொண்டு ஜனகன் ஆட்சி செய்திருக்கிறான். இருவரும் மூவுலகச் சக்கரவர்த்திகளே! இத்தகைய ஒரு வினோதத்தை அற்றை நாளில் யாரும் கவனித்ததாகவோ, இதற்குக் கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை!