பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 O அ. ச. ஞானசம்பந்தன்

சித்தமாய்விட்டான். நூறாவது பந்தல் இடுகாட்டில் சிதையின்மேல் இடப்பட்டது. அதன்மேல் ஏறி அமர்ந் தான் நந்திவர்மன். நூறாவது பாடலும் பாடப்பெற்றது.

‘ வானூறு மதியை அடைந்ததுன் வதனம்;

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி;

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்;

கற்பகம் அடைந்தஉன் கரங்கள்

தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்;

செந்தழல் அடைந்ததுன் தேகம்;

யானும் என் கவியும் எவ்விடம் புகுவேம்

எந்தையே கந்திகா யகனே !’

இப்பாடலையும் கேட்டுவிட்டு நந்திவர்மன் உயிரை விட்டான் என்று செவி வழிக் கதை பேசுகிறது. இத்தகைய வரலாறு ஒன்றை மனத்துட் கொண்டும், முன்பு சொல்லப் பட்ட நாவில் விஷம் உடைய ஒரு சிலரை மனத்தில் கொண்டும் குறள்,

“ வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க

சொல் ஏர் உழவர் பகை!’

என்று கூறுகிறது.

அதாவது, ‘வில்லை ஏராக உடைய வீரர்களின் பகையைக் கொண்டாலும் கொள்ளலாம்; ஆனால், சொல்லை ஏராக உடைய கரிநாக்கு உடையவர்களுடன் பகை கொள்ளாதே’ என்ற பொருளில் குறள் கூறும் வாழ்வைத் தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் வாழ்ந்து, தமிழ்மக்கள் உள்ளத்தில் அழியாப் புகழைப் பெற்று விட்டான். -