பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 O அ. ச. ஞானசம்பந்தன்


எல்லாப் பருவ மக்களிடமும் இருந்த இருக்கின்ற, இருக்கப் போகும் பண்புதான்.

ஆனால், 'வேண்டும்’ என்ற இந்தப் பண்பினால் மனிதன் என்றாவது நன்மை அடைந்தது உண்டா? இல்லை! இல்லை!! என்றுமே இப் பண்பு மனிதனுக்குத் தீமையைத் தவிர, நன்மை புரிந்ததே இல்லை. 'தீயனவற்றைத்தானே விரும்பக் கூடாது? நல்லனவற்றை வேண்டும் என்று விரும்பினால் என்ன?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களை நோக்கித் திருமூலர் இதோ விடை கூறுகிறார்:

ஆசை அறுமின்கள் ! ஆசை அறுமின்கள் !
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் !
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் !

ஆண்டவனை அடைய வேண்டும் என்றுகூட ஆசைப்பட வேண்டா என்பது திருமூலர் கட்டளை.

வேண்டும் என்ற ஆசை அவ்வளவு தூரம் மனிதனுக்குத் தீமை விளைக்கும் என்பதை நம் முன்னோர் கண்டனர். மனிதன் பொருள்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலடைகின்றான். பற்றுதல் பின்னர் விருப்பத்தை விளைவிக்கின்றது. விருப்பம் கை கூடாத பொழுது சினம் பிறக்கின்றது. சினத்தால் மயக்கமும், மயக்கத்தால் நினைவு தவறுதலும், நினைவு தவறுதலால் புத்தி அழிவும் ஏற்படுகின்றன. புத்தி அழிவதால் மனிதனே அழிகின்றான். (பகவத் கீதை அத். 2, பாடல் 62, 63) இங்ஙணம் கீதை விரிவாகப் பேசும் ஒன்றைக் குறள் இன்னும் சுருக்கிப் பேசுகின்றது. 'வேண்டும்’ என்னும் பண்பின் அடிப்படையில் நிற்கும் ஆசை அல்லது அவா என்பதைக் குறள் அழகாக எடுத்துக் கூறுகிறது. ‘ஆசை' என்பது எல்லா உயிர்கட்கும் எக் காலத்தும் தவறாமல் பிறப்பு என்னும் துன்பத்தைத் தருவதாகும்,’ என்னும் பொருளில்,