பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 15


பொழுது அதைக் கேளாமல் இருப்பதா என்று நினைத்து அவர் மனக் கருத்தை மாற்றிக் கொண்டிருந்தாலும் தவறு இல்லை. அவ்வாறு செய்திருந்தால் அவர் குறள் கண்ட வாழ்வை வாழ்ந்த பெரியவர் ஆகமாட்டார்.

உழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
அழி எனப்படு வார்

என்பது குறள்.

இறைவனுக்கு ஏயர்கோன் கூறிய விடை யாது? ‘ஐயரே, யானும் என் மூதாதையரும் நீரே தலைவர் என்று கருதி வாழ்ந்துவிட்டோம். உம் அடியவனாகிய எனக்கு வந்த இந்த வயிற்று வலியை, நேற்று உம்மாலே ஆட்கொள்ளப்பட்டவனாகிய சுந்தரமூர்த்தியா தீர்க்கப் போகிறான்? அப்படி அவன் வந்துதான் என்னுடைய நோய் தீருமென்றால், அந் நோய் தீர்வதைக் காட்டிலும் தீராது என்னை எவ்வளவு வேண்டுமாயினும் வருத்தட்டும்!” என்று கூறிவிடுகின்றார்.

நோய் தீரவேண்டும் என்று விரும்பி இருந்தால், இறைவன் கூறுகிறபடி செய்யவேண்டும். வேண்டா, நோய்கூடத் தீரவேண்டா, என்று கருதும் ஒருவரை யார்தான் என்ன செய்ய முடியும்? இறைவனும் திரும்பித் தான் போக வேண்டி இருக்கின்றது.

அனைத்தையும் இழந்து, இறுதியில் மனைவியையும் வெட்டப் போகின்றான் அரிச்சந்திரன். அந்த நிலையில் ஓடிவந்த விசுவாமித்திரன், "இந்தக் கொடுமை ஏன் செய்கிறாய்? 'இல்லை' என்று ஒரு வார்த்தை கூறி விட்டால், நீ இழந்த அனைத்தையும் தந்து விடுகின்றேன்," என்கின்றான். இழந்த பொருளும், ஏன், மகனுங்கூட வேண்டும் என்று நினைத்தால் தானே அரிச்சந்திரன் முனிவன் கூறியபடி செய்யத் துணிவான்? 'வேண்டா’ என்று கூறும் அரிச்சந்திரன் யாது கூறினான்?