பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. ‘ வெல்லும் சொல் ‘


‘சார்! அதோ வருகிறான் கண்ணன்! நான் விரைவில் ஒடிவிடுகிறேன்!” என்கின்றார் ஒருவர். ஒன்றும் புரியாத மற்றவர், ‘ஏன் ஐயா, அவனிடம் அவ்வளவு அச்சமா உமக்கு?’ என்கிறார். முன்னவர், ‘அச்சமாவது ஒன்றாவது! அவன் பேசத் தொடங்கினால் நிறுத்த முடியாதே! சளசளவென்று பேசி உயிரை வாங்கி விடுவானே!' என்கின்றார். இவ்வகைப் பேச்சு அன்றாடம் நாம் கேட்பதுதான்.

ஒரு காலத்தில் மனிதன் பேசத் தெரியாமல் 'சைகை' மூலமே தன் கருத்தைப் பிறருக்கு அறிவித்து வாழ்ந்தான். அவன் உலகில் தோன்றியபின் நெடுங்காலம் கழித்தே பேசத் தொடங்கினான்; பேசுவதன் மூலமே விலங்கி லிருந்து தான் வேறுபட்டவன் என்று பெருமைப்பட்டுக் கொண்டான். இறைவன் மனிதனுக்குக் கொடுத்துள்ள ஒப்பற்ற சாதனங்களுள் மிகச் சிறந்தது பேச்சுக்கலை. பேச்சு இல்லாமல் இருந்தால் உலகம் இவ்வளவு விரைவாக முன்னேறவும் முடியாது. என்றாலும் என்ன! பல சமயங்களில் சிலர் பேசுவதைக் கேட்க நேரிடும்பொழுது, ‘பேசும் சக்தியை மனிதனுக்குக் கடவுள் மறந்து போய்த் தந்து விட்டாரோ!’ என்றுகூட ஐயுற வேண்டியுளது.

பேச்சுச் சில சமயங்களில் வெறுப்பைத் தந்தாலும், உண்மையை ஆராயுமிடத்து, ‘சொல்' மிக மிக உயர்ந்த

கு.- 2