பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 21


சொல்லில் ஏற்படும் சோர்வினால் கேடு உண்டாகும். ஆதலால் மிகவும் ஜாக்கிரதையாக ஒன்றைப் பேச வேண்டும் என்ற கருத்தையே குறள்,

ஆக்கமும் கேடும் அதனான் வருதலான்
காத்து ஓம்ப சொல்லின்கண் சோர்வு

என்று கூறுகின்றது. பாண்டியன் சொல்லில் சோர்வு ஏற்பட்டதனால் அவன் மட்டுமா கேடுற்றான்? அவன் அரசி, மதுரை நகரம், அனைவருமே கேடுற்றனர். குறள் கண்ட வாழ்வை நடத்தாமையால் பாண்டியன் கேடுற்றான்.

பாண்டியன் எதிரே கண்ணகி நிற்கின்றாள். கண்ணிர் வழியும் கண்களுடனும் கையில் ஒற்றைச் சிலம்புடனும் நிற்கும் அவளைக் கண்ட உடனே பாண்டியன் சொல் சோர்வுடையவனாகலின், பாதி உயிரை இழந்துவிட்டான்; வேறு வழி இல்லாமல் 'யார் அம்மா நீ?’ என்றும் கேட்டுவிட்டான்.

அவன் கேட்டது ஒரே கேள்விதான், என்றாலும் என்ன?

சொற்சோர்வுடைய பாண்டியன் கேட்ட ஒரு கேள்விக்குச் 'சொல்லின் செல்வி’யாகிய கண்ணகியும் பதில் சொல்லுகின்றாள். என்ன வேற்றுமை? அவன் ஒரு குறளுக்கு இலக்கியமாய் அமைந்துவிட்டதைப் போலவே, அவளும் ஒரு குறளுக்கு இலக்கியமாய் அமைந்து விடுகின்றாள். 'யார் நீ?' என்றால், நான் இன்னான் என்று தானே நாம் விடை கூறுவோம்? ஆனால், அடுத்து எத்தனை கேள்விகள் பிறக்கும்? அத்தனைக்கும் சேர்தது விடை கூறிவிடுகிறாள் கண்ணகி. "ஆராய்ச்சி இல்லாத மன்னனே, சொல்கின்றேன், கேள்: இகழ்ச்சி கூற முடியாதபடி, தேவர்களும் அஞ்சும் வண்ணம் புறாவுக்