பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 O அ. ச. ஞானசம்பந்தன்

காகத் தன் உடம்பைக் கொடுத்த சிபியும், தன் பிள்ளையைத் தேர்க்காலில் கிடத்தித் தேரை ஒட்டிப் பசுவின் துயரைப் போக்கிய மனுச்சோழனும் ஆட்சி செய்த புகார் (காவிரிப்பூம்பட்டினம்) என் ஊராகும். பிறர் மதிக்கும் பெருஞ் செல்வத்துடன் புகழும் பெற்று வாழும் மாசாத்துவான் மகனாகப் பிறந்தும், விதி பிடித்துத் தள்ளினமையால், இவ்வூருக்கு என்னுடைய காற் சிலம்பை விற்க வந்து, நின்னால் கொலையுண்ட கோவலன் மனைவி யான்; கண்ணகி என்பது என் பெயர்," என்ற பொருளில் பேசுகிறாள்,

தேரா மன்னா! செப்புவது உடையேன்:
எள் அறு சிறுப்பின் இமையவர் வியப்பப்
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடைமணி நடு நா கடுங்க,
ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுடத் தான் தன்
அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்,
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ்வூர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் சுழல் மன்னா! நின்னகர் புகுந்து, ஈங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே..."

என்று கூறிமுடித்தாள் அந்தச் சொல்லின் செல்வி.

இந்தப் பதிலைக் கேட்ட பிறகு வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் பேசப் பாண்டியனுக்கு வாய்ப்பு ஏது? இவ்வாறுதான் பேச வேண்டும் என்று குறள் கட்டளை