பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. எது அறம் ?


கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைத் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சிறந்த கலைஞர்களாகவும், தேர்ந்த அரசியல் வாதிகளாகவும் இருந்தனர். பல்லவ மன்னர் பெரும்பாலார். அவர்களுடைய சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களும், ஓவியக் கலைக்குச் சித்தன்ன வாசல் ஒவியங்களும், இசைக்கலைக்கு உதாரணமாகக் குடுமியாமலைக் கல்வெட்டும் இன்றும் உள்ளன.

பிற்காலப் பல்லவருள் சிறந்த மன்னன் இராச சிம்மப் பல்லவன் என்பவன். ஒவ்வொரு பல்லவனும் ஒவ்வொரு துறையில் வல்லவனாய் இருந்தான். தன் முன்னோர்கள் செய்ததைப் போலவே தானும் ஒரு கலையை வளர்க்க நினைத்தான் இராசசிம்மன்; மிக நீண்ட காலம் ஆராய்ந்து, கோயில் கட்டுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான். இதற்கு ஒரு காரணமும் உண்டு. எல்லா வற்றுள்ளும் சிறந்ததாகிய கலையின் பயன் யாது? அலைந்து திரியும் மனத்தை ஒரு நிலையில் நிறுத்தி அனுபவத்தை உண்டாக்குவதே கலையின் பயன்.

இவ்வாறு மனத்தை ஒருநிலைப்படுத்தி அனுபவத்தை வழங்குவது எல்லாக் கலைகட்கும் பொதுவாயினும்,