பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 O அ. ச. ஞானசம்பந்தன்


தோன்றக் கேட்கவா வேண்டும்! இன்று அழிந்து சிதிலமான நிலையிலும் காஞ்சிக் கயிலாய நாதர் கோயில் ஈடும் எடுப்பும் இல்லாமல் விளங்குகின்றதே! அவன் ஒப்பற்ற, முறையில் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்ய நாளும் குறித்துவிட்டான்.

சென்னைப் பட்டினத்தை அடுத்துப் பன்னிரண்டு கல் தொலைவில் இருப்பது ‘திருநின்றவூர்’. இதனை இப்பொழுது தின்னனுார் என்று கூறுகிறார்கள். இராச சிம்மன் காலத்தில் வளம் நிறைந்திருந்த இவ்வூரில் ‘பூசலார்’ என்ற ஒரு பெரியார் வாழ்ந்தார். அவர் வறுமையில் வாழ்ந்தாலும் இறைவனுக்குத் திருக்கோயில் ஒன்று சமைக்க வேண்டும் என்ற அவாவுடையவராய் இருந்தார். இது நடைபெறக் கூடிய காரியமா? நீண்ட நாட்கள் முயன்றும், கோயில் கட்ட ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை அவருக்கு. எவ்வளவு முயன்றும் கோயில் கட்ட வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த அவர், பிறர் தயை இல்லாமலே கோயிலைக் கட்ட முனைந்தார்.

அழியக் கூடிய கல்லாலும் மரத்தாலும் கோயில் கட்டுவதானால், பிறருடைய தயை வேண்டும். எனவே, பூசலார் ஒரு புதிய வழியைக் கண்டார். அவர் யாருக்காகக் கோயில் எழுப்ப வேண்டும்? இறைவனுக்குத்தானே? எனவே, மனத்தினாலேயே கோயிலைக் கட்ட முடிவு. செய்தார். அரசன் என்று கோயிலுக்குக் கடைகால் இட்டானோ, அன்றே அவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து மனத்திற் கடைகால் இட்டார். கல் மரம் முதலியவற்றை மனத்தினாலேயே பெற்று மனத்தினாலேயே நிருமாணித்துப் பெரிய கோயிலைக் கட்டி முடித்துவிட்டார். அவர் மனத்தில் கட்டிய கோயிலுக்குக் குடமுழுக்குக்கும் ஒருநாள் குறிப்பிட்டு விட்டார். என்ன வேடிக்கை: இராச சிம்மப் பல்லவன் தான் கட்டிய கயிலாயநாதர் ஆலயத்துக்குக் கும்பாபி ஷேகம் செய்யக் குறித்த அதே நாளைத்தான் பூசலாரும்